Wednesday 30 September 2015

சூரிய உதயத்துக்கு முந்தி சந்தியாவந்தனம் செய்கிறவன் அகால மரணமடையமாட்டான்.-ஸ்ரீமஹாபெரியவாள்

சாஸ்திர, ஆசார அநுஷ்டானம்: சைகலாஜிகலாகவோ, வேறு விதங்களிலோ நம்மை "ஸாடிஸ்ஃபை" பண்ணாவிட்டாலும் சரி, நாம் சாஸ்திரங்களுக்கு அடங்கி, அடிபணிந்து அதன் பிரகாரம் தான் செய்ய வேண்டும்.

ஆத்மாவும் நிறைந்து, ஆரோக்ய திடகாத்ரமும் பெற்று, சாந்தியாக, ஸந்துஷ்டியாக நம் பூர்வீகர்கள் இருந்தது ஆசார அநுஷ்டான பலத்தால் தான்.

அவர்கள் பின்பற்றி வந்த சாஸ்திராசரணைகள் கஷ்டமாய் இருக்கிறதென்று நாம் விட்டுவிட்டது தான், நமக்கு அதைவிட எவ்வளவோ பெரிய நித்ய கஷ்டத்தைத் தந்திருக்கதென்று புரிந்து கொண்டு, அவற்றை இப்போதிலிருந்தாவது அநுசரிக்க ஆரம்பிக்க வேண்டும்.

வேறே எத்தனையோ கார்யங்களைச் செய்யும் நாம், கண்ட கண்ட விஷயங்களைப் படிக்கும் நாம், நாம் செய்ய வேண்டியது என்ன, செய்ய வேண்டாதது என்ன என்று ஈச்வராக்ஞையாகப் பெரியவர்கள் கொடுத்திருக்கிற தர்ம சாஸ்திரங்களைப் பார்க்க மாட்டேன் என்று இருந்து கொண்டே "தர்மா தர்மம் தெரியாமல் தப்பு பண்ணினதற்கு பகவான் தண்டிப்பாரா? என்று கேட்டால் நியாமே இல்லை.

கோயில்களும் அவற்றில் நடக்கிற உத்ஸவாதிகளும் தான் நம் மதத்துக்கு ஆயிரம் ,பதினாயிரம் காலமாக எத்தனையோ எதிர்ப்புகள் வந்த போதும் முட்டுக் கொடுத்து அவற்றைத் தாக்குப் பிடிக்கச் சக்தி தந்து வந்திருக்கின்றன.

இந்தப் பெரிய மூலதனத்தை அலக்ஷ்யம் செய்வது மத உணர்ச்சிக்கே பெரிய தீங்கு உண்டாக்கிவிடும்.

குரு தகப்பனார், தம்முடைய குழந்தைக்கு உபநயனம் செய்யும்போது டாம்பீக அம்ஸங்களுக்காகச் செய்யும் செலவில் பத்தில் ஒரு பங்கு உபநயனத்திற்காக ஏற்பட்ட கார்யத்தில் செலவழித்து, அந்தப் பையனை நல்ல பிரம்மசாரியாக உருவாக்க வேண்டும். உபநயனத்தின் செலவை விட உபநயன லட்சியத்துக்காகச் செலவு செய்வது விஷேசம்.

சூரிய உதயத்துக்கு முந்தி ஸ்நானம் செய்து, சந்தியாவந்தனம் செய்கிறவன் அகால மரணமடையமாட்டான்.