Wednesday 25 February 2015

“மனிதனின் வெளிப்படையான தோற்றத்தை வைத்து, மனதைக் குழப்பிக் கொள்ளக் கூடாது”-பெரியவா

பெரியவா கர்நாடகாவில் 1979 ம் வருடம் பாதயாத்திரை மேற்கொண்டு இருந்தார். நாளெல்லாம் பயணித்த பிறகு மாலை நேரத்தில் ஓர் இடத்தில் தங்குவது வழக்கம்.

அன்றும் வழக்கம் போல் ஒரு குளத்தின் கரையில் அமர்ந்து பக்தர்களுக்குத் தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது மகானைப் பார்க்க இரு அந்தண இளைஞர்கள் வந்தனர்.

குளிக்காத தோற்றத்தோடும், அழுக்கான ஆடைகளுடனும், காட்சியளித்த அவர்களைப் பார்த்த டாக்டர் ராமமூர்த்தி என்பவர் ‘மகானைப் பார்க்க வரும் போது குளித்து விட்டு சுத்தமான ஆடைகளை அணிந்து கொண்டு வரவேண்டாமோ’ என மனதுக்குள் நினைத்தார்.

இளைஞர்கள் இருவரும் மகானை சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தனர், மகான் கேட்டார் “அத்யயனம் முடிந்தாகி விட்டதா?” அவர்கள் ‘ஆம்’ என தலையை ஆட்டினர்.

“ரிக் வேதம் சொல்லுங்கள்!” என மகான் கட்டளை இட்டவுடன், அருவியிலிருந்து நீர் பெருக்கெடுத்து வந்தது போல், அவர்கள் வேதத்தைச் சொல்லத் தொடங்கினார்கள்.

கண்களை மூடியவாறு கேட்டுக் கொண்டிருந்த பெரியவா அவராக கையமர்த்திய பின் தான் அவர்கள் வேதம் சொல்வதை நிறுத்தினர். “எங்கிருந்து வருகிறீர்கள்?” மகான் கேட்டார். இருபது மைல்களுக்கு அப்பால் இருந்த ஓர் இடத்தைச் சொன்னார்கள் இளைஞர்கள்.

“ அங்கிருந்து எப்படி வந்தீர்கள்” மகான் கேட்டார்.

“நடந்து தான் வந்தோம்” இளைஞர்களின் பதில். பெரியவா திரும்பக் கேட்டார், “திரும்பிப் போகும் போது” “நடந்து தான் போக வேண்டும்” மகானைப் பார்க்க இருபது மைல் தூரத்தை நடந்தே, கடந்து வந்து இருக்கிறார்கள். உடம்பில் ஏன் அழுக்கு சேராது…?

மடத்தின் மூலமாக அவர்களுக்கு புதிய ஆடைகளைக் கொடுத்து, உண்ண உணவு கொடுத்து அனுப்பினார் மகான். அவர்களைப் பற்றித் தவறாக நினைத்துக் கொண்டிருந்த டாக்டரின் பக்கம் திரும்பினார் மகா பெரியவா.

“மனிதனின் வெளிப்படையான தோற்றத்தை வைத்து, அவனது உண்மையான யோக்கியதை அறியாது மனதைக் குழப்பிக் கொள்ளக் கூடாது” என்றார்.



டாக்டர் கண்ணீர் சொரிய மெய்சிலிர்த்தார்.

Thursday 19 February 2015

“உனக்கு பரமேசுவரனை தெரியுமோ?” - மஹாபெரியவா

சிவசங்கரன் என்பவர் ஸ்ரீமடத்தின் நெடுநாளைய பக்தர். ஒரு முறை அவர் தரிஸனத்துக்கு வந்த போது, ஒர் அனுக்கத் தொண்டர், அவரிடம் முரட்டுத் தனமாக நடந்து கொண்டு விட்டார்.

சிவசங்கரனுக்கு எல்லையில்லாத வருத்தம். உடனே தான் பட்ட அவமானத்தை ஓடி சென்று பெரியவாளிடம் புகார் செய்கிற அநாகரீகர் இல்லை அவர்.

பெரியவாளிடம் தனித்துப் பேசக்கூடிய வாய்ப்பு வந்தது.

“மடத்துத் தொண்டர்களில் சில பேர்கள் துஷ்டர்களாக இருக்கிறார்கள். தவறு செய்கிறார்கள். பேராசைக்காரர்களாக இருக்கிறார்கள். பெரியவா இப்படிப் பட்டவர்களையெல்லாம் பக்கத்தில் வைத்துக் கொண்டு எப்படிதான் சமாளிக்க முடிகிறதோ…” என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிற மாதிரி சொல்லி விட்டார்.

பெரியவாளுக்கு ஒரே சிரிப்பு.

“நீ சொல்கிற தகவல் எனக்கு ஒன்றும் புதுசில்ல”என்று ஒரு பார்வை.
பின்னர் சொன்னார்:

”ஆயிரம் பேர் வேலை செய்கிற ஒரு பாக்டரியில் எல்லாத் தொழிலாளர்களும் திறமைசாலிகளாக, யோக்யர்களாக, ஸின்ஸியராக இருக்கிறார்களா?

அரசாங்கத்தில் லட்சகணக்கான பேர் வேலை செய்கிறார்கள். எல்லோரும் ஒரே லெவலில் இருப்பதில்லை. நிறையப் பேர் வேலை சரியாகச் செய்வதில்லை; அல்லது, தப்பும் தவறுமாகச் செய்கிறார்கள். 

அவர்களை அப்படியே வீட்டுக்கு அனுப்ப முடியல்லே. அவர்களை வைத்துக் கொண்டே தான் ராஜாங்கம் நடக்கிறது.

ஏனென்றால், அரசும் – அதற்கு ஒரு தலைமையும் – அவசியம்.

தலைமை சரியாக இருக்கான்னு பார்த்தாலே போதும். அவ்வளவுதான் முடியும்.

“ஸ்ரீமடம் ஒரு சமஸ்தானம். பல வகையான சிப்பந்திகள் இருக்கத் தான் செய்வார்கள்…” என்று சொல்லிவிட்டு,“உனக்கு பரமேசுவரனை தெரியுமோ?”என்று கேட்டார் நம் உம்மாச்சி தாத்தா.

சிவசங்கரனுக்கு ஐந்தாறு பரமேசுவரன்களைத் தெரியும். அவர்களில் யாரை குறிப்பிடுகிறார்கள் என்பது புரியாமல் விழித்தார்.

”நான் கைலாசபதி பரமேஸ்வரனைச் சொன்னேன்… 

அவர் கழுத்தில் பாம்பு இருக்கு. கையில் அக்னி, காலின் கீழ் அவஸ்மாரம் இருக்கு. அவருடைய ருத்ரகணங்கள் எல்லாம் பிரேத, பைசாசங்கள் ! 
இத்தனையையும் தன்னிடத்திலே வைத்துக் கொண்டு தான் அவர் உலகம் பூரா சஞ்சரிக்கிறார். நடனமும் ஆடறார்.

“பாம்பைக் கீழே போட்டுவிட்டால் அது திரிந்து எல்லோரையும் பயமுறுத்தும், கடிக்கும்.

நெருப்பை கீழே போட்டால், வீடு – காடு எல்லாவற்றையும் அழிச்சிடும்.

அபஸ்மார தேவதையை போக விட்டால், கண்ட பேர்களையெல்லாம் தாக்கி மயக்கம் போடச் செய்யும்.

ப்ரேத – பைசாசங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

இப்படி துஷ்டர்களை தன் பக்கத்திலேயே வைத்துக் கொண்டிருப்பது தான் பரமேசுவரனுடைய பெருமை!”

சிவசங்கரன் அசந்து போய் நின்றார். பெரியவா ஏதோ சமாதானம் சொல்லித் தன்னை அடக்குவார்கள் என்று எதிர்பார்த்தார். ஆனால், என்ன தெள்ளத் தெளிவான உலகியலை ஒட்டிய பதிலைக் கூறி விட்டார்.

உம்மாச்சி தாத்தா சாக்ஷாத் பரமேஸ்வரனே!!!

Friday 13 February 2015

குழந்தை வரம் தந்த கொய்யாப்பழம் - மஹா பெரியவா கருணை !!!

சென்னையில் தற்போது வசித்து வருபவர் சூரியகுமார். மகா பெரியவாளின் தீவிர பக்தர்.

சூரியகுமாரின் மனைவி விஜயலட்சுமி, மயிலாப்பூரில் ஒரு பள்ளியில் ஆசிரியையாக இருந்தார். இல்லறம் இனிமையாகப் போய்க்கொண்டிருந்தாலும், இந்தத் தம்பதியருக்குக் குழந்தைப் பேறு அமையவில்லை. நாட்கள் தள்ளிக் கொண்டே போயின.

சூரியகுமாருக்கு மிகவும் பழக்கமான ஆன்மிக அன்பர் ஒருவர், ‘‘மனதில் ஒரு குருவை நினைத்துக் கொள். அவரையே சரண் அடைந்து விடு. அவரிடம் உன் பிரார்த்தனையை வை. நிச்சயம் உனக்கு என்ன தேவையோ, அதை அருளுவார்’’ என்று சொல்லி இருந்தார்.

அதன்படி தன் குடும்பத்துக்கு மிகவும் இஷ்டமான காஞ்சி மகா ஸ்வாமிகளையே குருவாக மனதில் வரித்துக்கொண்டு, அவரிடம் தன் பிரார்த்தனையை வைத்தார். தினமும் மகா ஸ்வாமிகளை வணங்கினார். நாட்கள் இப்படிப் போய்க்கொண்டிருந்தன.

அன்றைய தினம் மகர சங்கராந்தி. இரவு சூரியகுமாரின் கனவில் மகா பெரியவா வந்தார். சூரியகுமாரிடம், ‘எனக்குக் கொய்யாப்பழம் வேண்டும்’ என்று கேட்டார் பெரியவா. சிலிர்ப்புடன் துணுக்குற்று எழுந்தார் சூரியகுமார். ‘பெரியவா கனவில் வந்து கொய்யாப்பழம் கேட்கிறாரே… எப்படியாவது காஞ்சிபுரம் சென்று அவரிடம் சேர்ப்பித்தாக வேண்டும்’ என்று அந்த நள்ளிரவிலேயே மனதுக்குள் சங்கல்பம் எடுத்துக் கொண்டார். அதற்கேற்றாற்போல் அப்போது மகா பெரியவா காஞ்சிபுரத்தில்தான் இருந்தார்.

அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். அன்றைய தினம் சென்னை நகர் முழுதும் கொய்யாப்பழத்தைத் தேடி அலைந்தார் சூரியகுமார். அது சீஸன் இல்லாததால், எங்கேயும் கொய்யாப்பழம் கிடைக்கவில்லை. கடைசியில் ஒரு வழியாக சூரியகுமாரின் அண்ணன் ரவிகுமார் பாரிமுனையில் ஒரு கடையில் இருந்து கொய்யாப்பழங்களை எப்படியோ தேடி வாங்கி வந்து விட்டார்.

மாட்டுப் பொங்கல் அன்று காலை ரவிகுமார், சூரியகுமார் இருவரும் தம்பதி சமேதராக காஞ்சி ஸ்ரீமடத்துக்குப் புறப்பட்டனர். பெரியவா கேட்ட கொய்யாப்பழத்தோடு வேறு சில பழங்களும் வாங்கி வைத்திருந்தனர்.

விடுமுறை தினம் என்பதால் அன்றைய தினம் காஞ்சி ஸ்ரீமடத்தில் தாங்க முடியாத கூட்டம். பெரியவாளின் சந்நிதிக்குச் சென்று திரும்புவதே சிரமம் என்பதால், சென்னையில் இருந்து வந்திருந்த பல பக்தர்களும் தொலைவில் இருந்தே மகா பெரியவாளை தரிசனம் செய்துவிட்டுத் திரும்பினார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

இத்தனை கூட்டத்தில் நீந்திப் போய் எப்படிப் பெரியவாளிடம் சென்று, கொய்யாப்பழங்களைக் கொடுப்பது என்று சகோதரர்கள் இருவரும் யோசித்துக்கொண்டிருந்தனர். அப்போது ஸ்ரீமடத்தில் பணி புரியும் & தங்களுக்குப் பரிச்சயமான ஒரு நண்பரைப் பார்த்தார்கள். இருவரும் முகம் பிரகாசிக்க, அந்த நண்பரை நோக்கி ஒருவாறு கூட்டத்தில் புகுந்து சென்றார்கள்.

அந்த நண்பரும், இவர்களை முகம் மலரப் பார்த்துவிட்டு, ‘என்ன?’ என்பதுபோல் கேட்டார்.

அதற்கு சூரியகுமார், ‘‘பெரியவா நேத்து என் கனவில் வந்து கொய்யாப்பழம் கேட்டார். அதான் வாங்கிண்டு வந்திருக்கோம். பெரியவாகிட்ட அதைக் கொடுத்துட்டு ஆசிர்வாதம் வாங்கணும்’’ என்றார்.

அந்த நண்பரின் முகம் மாறியதே பார்க்கணும். ‘‘தோ பாருப்பா… நீ என் ஃப்ரெண்டுதான். அதுக்காக, பெரியவாளை உடனே பாக்கணும்கறதுக்காக ‘என்கிட்ட கொய்யாப்பழம் வாங்கித் தரச் சொன்னார். மெட்ராஸ்லேர்ந்து வாங்கிண்டு வந்திருக்கேன்’னு பொய்யெல்லாம் சொல்லாதே’’ என்று படபடவென்று பேச… ரவிகுமாரும் சூரியகுமாரும் அதிர்ந்தார்கள்.

கேட்டவருக்குத் தெரியாதா, இதை எப்படி வாங்கிக்கொள்ள வேண்டும் என்று?!

ஸ்ரீமடத்து அன்பரின் முகம் போன விதத்தைப் பார்த்தால் இவர்கள் இருவரும் சொன்ன விஷயத்தை நம்பியதாகத் தெரியவில்லை. தன் தலையை இப்படியும் அப்படியும் ஆட்டினார். பிறகு, ‘‘பெரியவாளை உடனே தரிசனம் பண்ணிட்டுப் போகணும்கறதுக்காக அவர் என் கனவில் வந்தார்… கொய்யாப்பழம் கேட்டார்… அப்படி இப்படின்னு எல்லாம் பொய் சொல்றேளா? மகா பெரியவாளே உங்க கனவில் வந்து கொய்யாப்பழம் கொண்டு வான்னு சொன்னாரா?’’ என்று கிண்டலும் கேலியுமாகக் கேட்டார். அப்போது மகா பெரியவாளின் கைங்கர்யத்தில் இருக்கும் ஆசாமி ஒருவர், இந்த அன்பரைப் பார்த்துக் கை நீட்டி அவசரமாக அழைக்க… இவர்களிடம் எதுவும் சொல்லாமலே பொசுக்கென நகர்ந்து போய்விட்டார்.

கனவில் பெரியவாளின் அருட்காட்சி கிடைக்கப் பெற்ற சூரியகுமார், அதிர்ந்து போனார். “இன்னிக்கு எத்தனை நேரமானாலும் பரவால்லை. வரிசையில் நின்னு, இந்தக் கொய்யாவை பெரியவாகிட்ட சமர்ப்பிச்சுட்டுத்தான் மெட்ராஸ் கௌம்பப் போறோம்’’ என்று தன் அண்ணன் ரவிகுமாரைப் பார்த்துச் சொல்லிவிட்டு, பெரியவா தரிசனத்துக்காகக் காத்திருக்கும் நீண்ட வரிசையில் தன்னை இணைத்துக்கொண்டார் சூரியகுமார். அவரைத் தொடர்ந்து அவருடன் வந்த குடும்பத்தினர் அனைவரும் அதே வரிசையில் இணைந்தனர்.

பெரியவா கேட்ட கொய்யாப்பழங்களை மட்டும் பயபக்தியுடன் தன்வசம் ஒரு பையில் வைத்துக்கொண்ட சூரியகுமார், அவர் சந்நிதானத்தில் சமர்ப்பிக்கவேண்டிய மற்ற பழங்களைத் தன் அண்ணன் ரவிகுமாரிடம் கொடுத்தார்.

வரிசையில் திரளான பக்தர்கள் நின்றிருந்தாலும், அனுபவம் வாய்ந்த ஸ்ரீமடத்து அன்பர்கள் கூட்டத்தை வெகு நேர்த்தியாகக் கட்டுப்படுத்திக்கொண்டு வந்ததால், சற்று விரைவாகவே வரிசை நகர்ந்து போய்க்கொண்டிருந்தது.

மதியம் ஒண்ணரை மணி வாக்கில் பெரியவா திருச்சந்நிதி அருகே வந்துவிட்டனர் சூரியகுமாரும் ரவிகுமாரும். இருவர் முகங்களிலும் பெரியவாளை தரிசிக்கப் போகிற பரவசம். அந்த மகானின் அருகே நெருங்கிவிட்டோம் என்கிற ஆனந்தம். ‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர’ கோஷம் எங்கும் முழங்கியபடி இருந்தது.

சர்வேஸ்வரனாக அந்த பரப்பிரம்மம் கொஞ்சமும் களைப்பே இல்லாமல் கன ஜோராகக் காட்சி தந்துகொண்டிருந்தது.

களைப்பும் கவலையும் இந்த மனித குலத்துக்குத்தானே?! மகான்களுக்கு ஏது!

பெரியவா தன் வலக் கையை உயர்த்தி, தன் முன்னால் நின்று கொண்டிருக்கும் சகோதரர்கள் இருவரையும் பார்த்து ஆசிர்வதித்தார். கனிவும் புன்னகையும் மாறா முகத்துடன் இருவரையும் தன் பார்வையால் ஏறிட்டார் பெரியவா.

கொய்யாப்பழங்கள் இருந்த பையைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு மகா ஸ்வாமிகளின் அருகே கைகட்டி, வாய் பொத்தி பவ்யமாக அவரது திருமுகத்தையே ஏக்கமாகப் பார்த்தபடி நின்றிருந்தார் சூரியகுமார். பக்திப் பரவசத்தின் வெளிப்பாடாக அவரது கண்கள் கலங்கிக் காணப்பட்டன.

‘‘பெரியவாளை எப்படியும் இன்னிக்கு தரிசனம் பண்ணியே ஆகணும்னு ஒரு சங்கல்பம்.. அதான் குடும்பத்தோட புறப்பட்டு வந்துட்டோம்’’ & சூரியகுமார் நா தழுதழுத்தபடி சொன்னார்.

‘‘கொய்யாப்பழம் கேட்டேனே… கொண்டுவந்தியோ?’’ பெரியவா கேட்டதும், சூரியகுமாரும் ரவிகுமாரும் ஆடிப் போனார்கள். இருவரின் மனைவிகளும் விதிர்விதிர்த்துப் போனார்கள். இத்தனைக்கும் சூரியகுமாரின் கையில் இருக்கும் துணிப்பைக்குள் இருப்பது கொய்யா என்பதை எவராலும் பார்த்துத் தெரிந்துகொள்ள முடியாது.

கூடவே, பெரியவாளுக்கு அருகே கைங்கர்யத்துக்காக நின்று கொண்டிருந்த இவர்களின் நண்பரும் (‘பெரியவா தரிசனத்துக்காகப் பொய் சொல்லாதே’ என்று சொல்லி விட்டுச் சென்றாரே, அவர்தான்!) அதிர்ந்து போனார். ‘இதைத்தானே முதலில் என்னிடம் சொன்னார். பெரியவா கனவில் வந்து கொய்யாப்பழம் கேட்டார். அதை அவரிடம் சமர்ப்பிக்க வேண்டும்’ என்றல்லவா சொன்னார்?! நான் அதைக் கிண்டலும் கேலியுமாக பரிகசித்துவிட்டு வந்தேனே’ என்று தனக்குள் மருகினார். ‘என்னை மன்னிச்சிடுப்பா’ என்று சூரியகுமாரைப் பார்த்துச் சொல்லாத குறையாகக் கையெடுத்துக் கும்பிட்டார், மன்னிப்புக் கோரும் தொனியில்!

பெரியவாளே வாய் திறந்து கேட்டதும், துணிப்பையில் இருந்து கொய்யாப்பழங்களை பரபரப்புடன் வெளியில் எடுத்தார் சூரியகுமார். பெரியவாளின் சந்நிதிக்கு முன்னால் இருக்கிற ஒரு காலி மூங்கில் தட்டில் அவற்றை வைத்தார்.

‘‘இதை அலம்பிட்டியோ?’’ – கொய்யாவைக் காட்டி சூரியகுமாரிடம் கேட்டார் பெரியவா.

சூரியகுமார் தன் அண்ணன் ரவிகுமாரின் முகத்தைப் பார்க்க… அவரோ உடன் இருந்த தன் துணைவியார் மற்றும் சூரியகுமாரின் மனைவியைப் பார்க்க… அனைவருமே உதடு பிதுக்கினார்கள்.

சட்டென்று சுதாரித்துக்கொண்ட சூரியகுமார், ‘‘கௌம்பற அவசரத்துல கொய்யாவை அலம்பறதுக்கு மறந்துட்டோம் பெரியவா. இதோ, இப்ப… இப்பவே அலம்பிடறோம்’’ என்று கொய்யாப்பழங்களைக் கையில் எடுத்துக்கொண்டு சுற்றும்முற்றும் பார்த்தார்.

அதற்குள், பெரியவாளின் கைங்கர்யத்துக்காக நின்றிருந்த சீடன் ஒருவன் பித்தளைச் சொம்பில் தண்ணீர் எடுத்து வந்தான். அங்கேயே ஒரு ஓரமாகப் போய் கொய்யாப்பழங்களைத் தண்ணீர் விட்டு அலம்பினார் சூரியகுமார். ஈரம் சொட்டச் சொட்ட அந்தப் பழங்களை உதறியபடி எடுத்து வந்து, பழையபடி மூங்கில் தட்டில் வைத்தார்.

பெரியவாளின் திருமுகத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர் அனைவரும்.

அந்தப் பரப்பிரம்ம சொரூபி மூங்கில் தட்டைப் பார்த்தார். பிறகு, அதில் இருந்து ஒரு கொய்யாவைத் தன் கையில் எடுத்தார். பச்சை நிறமும் மஞ்சள் நிறமும் கலந்து நல்ல பழுத்த பழமாகக் காட்சி அளித்தது பெரியவாளின் திருக்கரத்தில் இருந்த கொய்யா. தன் வலது உள்ளங்கையில் அதை வைத்துக்கொண்டு இடது உள்ளங்கையால் அதன் மேல் ஒரு அழுத்து அழுத்தினார். அவ்வளவுதான். கொய்யாப்பழம் ‘பொளக்’கென இரண்டு சரி பாதியாக உடைந்தது.

க்ஷண நேரத்துக்குள் ஒரு பாதியைத் தன் வாய்க்குள் போட்டுக் கொண்டார் மகா பெரியவா. மற்றொரு பாதியை சூரியகுமாரிடம் கொடுத்து அவரையும் அவருடைய மனைவியையும் சாப்பிடச் சொன்னார்.

மிகுந்த பவ்யத்துடன் பெரியவா தந்த பிரசாதமான பாதி கொய்யாவை வாங்கிக்கொண்டார் சூரியகுமார். பெரியவாளின் சந்நிதியிலேயே சாப்பிடும்படி உத்தரவானது. எனவே, பாதி கொய்யாவில் ஒரு பகுதியை எடுத்துத் தன் மனைவியிடம் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார். மறு பாதியைத் தான் சாப்பிட்டார்.

அங்கு கூடி இருந்த அனைவரும் இந்த நிகழ்வுகள் அனைத்தையும் வேடிக்கை பார்த்து மெய்சிலிர்த்துப் போனார்கள். ‘இந்தத் தம்பதிக்கு எப்பேர்ப்பட்ட ஆசி கிடைத்திருக்கிறது’ என்று நெகிழ்ந்து போனார்கள்.

அதன்பிறகு கொய்யாப்பழத்தின் சிறப்பு, அதன் மருத்துவ குணம், என்னென்ன நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்தலாம் என்றெல்லாம் ஒரு நீண்ட உரையாற்றினார் மகா பெரியவா. சூரியகுமார் குடும்பம் உட்பட வந்திருந்த அனைவரும் இமை கொட்டாமல் இந்த உரையைக் கேட்டுக்கொண்டிருந்தனர்.

‘கொய்யாப்பழ படலம்’ முடிந்தது. மகா பெரியவா எழுந்து தன் ஜாகைக்குச் சென்றார். பக்தர்கள் கன்னத்தில் போட்டு தரிசித்துவிட்டு, அங்கிருந்து நகர ஆரம்பித்தனர்.

மதியம் ஸ்ரீமடத்திலேயே போஜனத்தை முடித்துவிட்டு சென்னைக்குத் திரும்பினர் சூரியகுமார் குடும்பத்தினர்.

அடுத்து வந்த ஒரு சில நாட்களிலேயே கர்ப்பம் தரித்தார் சூரியகுமாரின் மனைவி.

பெரியவா தந்த பிரசாதத்தின் மகிமை அதுதான்.

அதுவும் பெரியவாளே விருப்பப்பட்டுக் கனவில் கேட்டு வாங்கி, திரும்பித் தந்த பிரசாதம் ஆயிற்றே ! 

Thursday 12 February 2015

மஹா பெரியவா பாராட்டிய வைதிகர் !!!

ஒரு வைதிகர், எளிய வாழ்க்கை, போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.கோயில் திருப்பணிகளில் மிகவும் ஆர்வம். தன் கிராமத்திலுள்ள பிள்ளையார் கோயில்,மாரியம்மன் கோயில்,சிவன் கோயில் எல்லாவற்றுக்கும் அரும்பாடுபட்டுத் திருப்பணிகள் செய்தார்.

பெரிய தொகை நன்கொடை கொடுப்பவர்கள் கூட அவரிடமிருந்து ரசீது எதிர்பார்க்கமாட்டார்கள்.
அவ்வளவு சுத்தம். அவருடைய சேவையை அண்டை கிராமத்தார்களும் பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஒரு வயற்காட்டில் ஒரு பெரிய சிவலிங்கம் தன்னந்தனியாக வெயிலில் காய்ந்து, குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தார். இந்த வைதிகர் முயற்சியால் இப்போது அவர் (சிவலிங்கம்) மழை-காற்றுக்கு அஞ்சாமல்,கருவறையில் கோயில் கொண்டுள்ளார்.

இப்படி எத்தனையோ கோயில்கள். ஆனால்,வைதிகர் எந்தக் கும்பாபிஷேகத்திலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டதில்லை. கூட்டத்தில் ஒரு மூலையில் ஒண்டிக்கொண்டு நிற்பார்!
தம்பட்டமே இல்லாத இவரைப் பற்றிப் பெரியவாளுக்கு தெரிந்திருந்தது.

‘எப்படி?’ என்றெல்லாம் கேட்கக்கூடாது. அது சிவரகசியம்!

அந்த வைதிகர் அடிக்கடி ஸ்ரீமடத்துக்கு வருபவர் அல்லர். அவருக்கு ஓய்வு கிடைத்தால்தானே வெளியே போவதற்கு! அவர் வழி அப்பர் வழி, ஆமாம். Upper வழி.

உழவாரப் பணி, கோபுரங்களில் வேலை,நாலைந்து பையன்களை உடன் வைத்துக்கொண்டு சந்தடி இல்லாமல் சிவத்தொண்டு செய்வார்.

ஒருதடவை பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார். பெரியவாளை வந்தனம் செய்துவிட்டு ஓரமாக நின்றார். வழக்கமான ஊர்-பேர் விசாரணைகூடச் செய்யவில்லை பெரியவாள்.

அந்தச் சமயத்தில் பரம பக்தர்களான பணக்காரத் தம்பதிகள் வந்து வந்தனம் செய்துவிட்டு எழுந்தார்கள்.

பெரியவாள், தொண்டருக்கு என்ன குறிப்பு கொடுத்தாரோ, தெரியாது. விலையுயர்ந்த ஒரு சால்வையைக் கொண்டுவந்து தட்டில் வைத்தார் ஓர் அணுக்கத் தொண்டர். பெரியவாள், அந்தப் பணக்காரப் பக்தரை அழைத்து, அந்தச் சால்வையை, வைதிக பக்தருக்குப் போர்த்தச் சொன்னார்கள்.

எல்லோருக்குமே வியப்பாக இருந்தது.

இந்த வைதிகர் என்ன, அவ்வளவு பெரிய பண்டிதரா? யாகம் செய்தவரா..?

பெரியவா பணக்காரரிடம் சொன்னார்கள். “இவரைப் பார்த்திருக்கிறாயோ?”

“இல்லை”

“இவர் அட்ரஸ் தெரியுமோ?”

“தெரியாது”

“எனக்குத் தெரியும்! சொல்லட்டுமா?” (என்ன குறும்பு!)

“சாஸ்திரிகள் கேர் ஆஃப் சிவன் கோயில்! இவர் பெரிய Builder. என்ன? பல சிவன்களுக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்…!”

பக்தர்கள் கூட்டம் நெகிழ்ந்து உருகியது.

ஒரு பத்திரிகையில்கூட இவர் புகைப்படத்தைப் பார்த்ததில்லையே…

“இவர் சிவப்பழம்…பிரசாதத்தோட நெறய்ய பழங்கள் கொடு…”

அறிமுகமே இல்லாத இவர், தூய சிவப்பணியாளர் என்பது பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?.

அது எந்த வகை ஸித்தி? ஆயிரம் கன்றுக்குட்டிகள் நடுவில் ஒரு தாய்ப்பசு தன் கன்றை அடையாளம் கண்டுகொள்ளாதா என்ன? !!!

Saturday 7 February 2015

'யாவார்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே' - தன்னை பற்றி மஹா பெரியவா கூறும் விளக்கம்...

'சுவாமிகளை இந்த மாதிரி ராப்பகல் போட்டு பிடுங்கப்படாது' என்று மடத்து காரர்களும் என்னை சுற்றி இருக்கிறவர்களும் ஜனங்களை கோபித்துகொள்கிறார்கள்.

'சுவாமிகளுக்கும் சரீரம் இல்லையா? அதற்கு சிரமம் இருக்காதா? என்று சொல்லி (குறை சொல்லிகொள்ள வருகிறவர்களை) தடுக்கிறார்கள், விரட்டிக்கூட அடிக்கிறார்கள்.

இது சரிதானா? என் ஒருத்தனுக்கு சரீர சிரமம் ஏற்படும் என்பதற்காக இத்தனை பேர் மனசில் இருக்கிற ஸ்ரமத்தை, கொதித்து கொண்டு இருக்கிற தவிப்பை சொல்லிக்கொண்டு ஏதோ ஒரு தாபசமனம் அடைவதை தடுப்பது நியாயம் ஆகுமா?

நான் எதற்காக இருக்கிறேன்? இந்த வாழ்க்கை - வாழ்நாள் எதற்காக ஏற்பட்டு இருக்கிறது? ஜனங்களுடைய கஷ்டங்களை கேட்டு ஆறுதல் சொல்வதற்காகத்தான் இந்த வாழ்க்கை ஏற்பட்டு இருக்கிறது. 

ஜனங்கள் ராவும் பகலும் படுகிற துக்க பாரத்தை லேசாகுவதற்கு தான் இந்த சரீரம் ராவும் பகலும் தன்னால் ஆன உபகாரத்தை செய்ய வேண்டும் என்று ஏற்பட்டு இருக்கிறது.

நான் லேசாக்குகிறேன் அதற்காக ஏதோ பண்ணுகிறேன். பண்ணுகிற சக்தி எனக்கு இருக்கிறது - என்றெல்லாம் இல்லை. ஜனங்கள் தாங்களே தங்களை லேசாக்கி கொள்வதற்கு என்னை ஒரு கருவியாக வைத்து இருக்கிறது என்று சொல்லுகிறேன்.

காரியத்தில் நான் பரிஹாரம் பண்ணினாலும், பண்ணாவிட்டாலும், வாய் வார்த்தையாக ஆறுதல் சொல்லி விட்டாலே கஷ்டப்படுகிறவர்களுக்கு ரொம்பவும் நிம்மதியாகி விடுகிறது.

'யாவார்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே!' என்று திருமூலர் சொன்ன வாயுபகாரம் தான் நான் பண்ணுவது.

Wednesday 4 February 2015

காலத்தைக் கடந்தவர் மஹா பெரியவா....!!!!

வைகாசி மாதம் உச்சிப் போது கத்ரி முடிந்தும் வெயில் உக்ரம் தணியவில்லை.
அப்போது லால்குடிக்கு அருகில், நீண்ட நாட்களுக்கு முன்பு ஸ்வாமிகள் முகாமிட்டிருந்த நேரம்.

தெருவில் நடமாட்டமே இல்லை. பறவைகள் கூட ஒடுங்கி இங்கொன்றும் அங்கொன்றுமாய்ப் பறந்தன. தலைச் சுமை விற்பனையாளர்கள் வெயிலுக்குப் பயந்து ஒதுங்கி விட்டனர். கானல் நீர் தரைக்கு மேல் அழகாக அசைவது தெரிந்தது.

அத்தகைய வெயிலில், ஸ்ரீ காஞ்சி காமகோடி ஆசாரிய ஸ்வாமிகள் தெருவில் விறுவிறுவென்று நடந்து சென்ற அரிய காட்சியை வெகு சிலர் தான் பார்த்திருக்க முடியும் ! நிலவொளியில் நடப்பது போல் ஸ்வாமிகள் மட்டும் அந்தக் கடும் கோடையில், தன்னந் தனியாக பாதரட்சை அணிந்து, கையில் தண்டமுடன் வேகமாக நடந்து சென்றார். அவருடன் வேறு யாரும் வரவில்லை. ஸ்வாமிகள் மட்டும் அப்படிப் போவது வழக்கமில்லை; மிக அபூர்வம்!

பின்னால் பத்தடி தள்ளி நாதசுரக்காரர் கையில் நாதசுரத்துடன் ஓடோடியும் வந்தார். அவருக்குப் பின்னால் தவுல்காரர்; ஸ்வாமிகளுக்குக் குடை பிடிப்பதற்காக ஒருவர் பட்டுக் குடையுடன் ஓடோடி வந்தார். மடத்து சிப்பந்திகள் கையில் வெள்ளிப் பாத்திரங்களுடன் அரக்க பறக்க ஓடி வந்தனர். இவர்கள் எல்லோரும் வெகு வேகமாக ஓடி வந்து, ஸ்வாமிகளுக்கு முன்னால் சென்றனர். தீ மிதிப்பது போல் பதை பதைக்கிற அந்த வெயிலில் ஸ்வாமிகள் வேகமாக நடந்து போனதும், பின்னால் பரிவாரங்கள் ஓடிவந்து கலந்து கொண்டதுமான அந்த நிகழ்ச்சியை யாரோ ஓரிருவர் தான் கண்டிருக்க முடியும்.

அந்தக் காட்சியானது முதலையிடம் சிக்கிக்கொண்ட யானையரசன், ‘ஆதிமூலமே‘ என்று கதறியவுடன், மறுகணமே ஸ்ரீமந்நாராயணன் வைகுண்டத்திலிருந்து தன் பரிவாரங்களெல்லாம் தொடர ஓடி வந்த மட்டற்ற காருண்யத்தை பார்த்தவர்களுக்கு நினைவூட்டியது.

ஸ்வாமிகளைத் தொடர்ந்து கடைசியாகச் சென்றவர்களிடம் விசாரித்த போது அவர் கூறிய விவரம்:

ஒரு பக்தர் வீட்டுக்கு 12 மணிக்கு ஸ்வாமிகள் பிக்ஷைக்கு வருவதாக ஏற்றுக் கொண்டிருந்தார்கள். மடத்திலே பூஜைகள் எல்லாம் முடிவதற்கு 11 :30 மணி ஆகி விட்டது. தர்சனத்திற்கு வந்த மக்கள் கூட்டம் கலையவில்லை. அவர்களை சமாளிப்பதே பணியாளர்களுக்கு சரியாக இருந்தது. மணி 11 : 50 ஆகியும் மடத்தின் பணியாளர்கள் புறப்படுவதாகக் காணவில்லை. 

ஸ்வாமிகளுக்கோ பக்தனை காத்திருக்க வைக்க மனம் இல்லை. யாரையும் எதிர் பாராமல் அந்த அன்பர் வீட்டுக்கு தாமே புறப்பட்டு விட்டார்கள்.

குறிப்பிட்ட நேரத்துக்கு எதையும் செய்யத் தெரியாத அல்லது செய்யும் பழக்கமில்லாதவர்கள் நாம்! நேரத்தையும் காலத்தையும் கடந்த ஸ்வாமிகளோ, குறிப்பிட்ட தருணத்தில் தாம் ஏற்றுக் கொண்ட கடமையை ஆற்றுவதில் தீவிர கவனமுடையவர்கள் என்பது மட்டுமல்ல….

ஸ்வாமிகளைப் போன்ற யதீஸ்வரர்களுக்கு உரிய நேரத்தில் பிக்ஷாவந்தனம் செய்வது மிகப் பெரும் புண்ணியம். அதே சமயத்தில் காலந் தாழ்த்தி அவர்களுக்கு பிக்ஷாவந்தனம் செய்விப்பது பலமடங்கு பாவமாகும்.

தமது பக்தர், அந்த அபசாரத்துக்கு ஆளாக ஸ்வாமிகள் தாமே காரணமாக இருந்துவிடக் கூடாது என்று கருணையுடன் கருதி இருக்கலாம் அல்லவா ?

பரமாச்சாரியார் காலத்தைக் கடந்தவர்; ஆனால் காருண்யத்தைக் கடந்தவர் அல்லவே !