Wednesday 3 December 2014

கொடுப்பதிலும் அர்த்தம் உண்டு. கொடுக்க மறுப்பதிலும் அர்த்தம் உண்டு - கருணைக் கடல் நம் காஞ்சி மாமுனிவர்.

“இறைவன் கொடுப்பதிலும் அர்த்தம் உண்டு. கொடுக்க மறுப்பதிலும் அர்த்தம் உண்டு” என்று கூறுவார்கள்.

 நாம் வருந்தி வருந்தி கேட்பது நமக்கு நன்மை தருமா என்பதை நாம் அறியமாட்டோம். 

அவன் ஒருவனே அறிவான். எனவே நமது அபிலாஷைகளை அவன் பாதார விந்தங்களில் சமர்பித்துவிட்டு நமது கடமையை நாம் செய்துவரவேண்டும். 

குருவருளும் அப்படித்தான். குரு கொடுத்தால் நூறு நன்மை. மறுத்தால் இருநூறு நன்மை. 

கீழ்கண்ட சம்பவமும் உணர்த்துவது அதைத் தான்.  மகான்கள் மறுப்பதிலும் அனுக்கிரகம் உண்டு! 

ஒரு குக்கிராமத்தில் முகாமிட்டிருந்த மஹானை தரிசிக்க ஒரு மிராசுதாரும் அவரது உதவியாளரும் வந்திருந்தனர். வந்த பக்தர்கள் அனைவரிடமும் அன்பொழுக பேசி அருள் செய்யும் கருணைத் தெய்வம் காஞ்சி மாமுனி, அன்று வித்தியாசமாக உடன் வந்த உதவியாளரிடம் மட்டுமே கொள்ளைப் பேச்சு பேசினார்.

அழைத்து வந்த எஜமானரை ஒரு வார்த்தை கூட விசாரிக்கவில்லை. இது மிராசுதாருக்கு வருத்தமாக இருந்தது.

காரணமும் புரியவில்லை. தன்னிடம் பேசாமல் இருக்குமளவிற்கு தான் தவறு செய்ததாகவும் தெரியவில்லை. எனினும் யார் காரணம் கேட்க முடியும்?  வருத்தம் வாட்டவே விடைபெற்றுச் சென்றார்.

முகாமிட்டிருந்த இடத்திலிருந்து ரயில் நிலையம் தள்ளி இருந்ததால், மடத்து வண்டியில் அவர்களை கொண்டு விடும்படி உடனிருந்த தொண்டருக்கு உத்தரவிட்டார் 

ஞான மாலை. ரயில் நிலையம் சென்று வழியனுப்பிவிட்டு வந்த தொடரை அழைத்து, “வண்டியில் போகும்போது மிராசுதார் என்ன பேசினார்? தன்னைப் பற்றி என்ன சொன்னார்?” என்று கேட்க, “அவர் ரொம்ப குறைப்பட்டுக்கொண்டார். பெரியவா அவரிடம் பேசாதது அவருக்கு ரொம்ப வருத்தமாய் இருந்ததாம். 

வழியெல்லாம் பெரியவாளை பற்றியே பேசிக்கொண்டிருந்தார். எப்பொழுதும் தன்னிடம் அன்பாய் பேசும் பெரியவா இன்று பேசாத காரணம் புரியவில்லை என்று அதே சிந்தனையில் இருந்தார்.” என்று கூறினார் தொண்டர்.

உடனே ஞானக்கடல், “எல்லாம் முடிஞ்சி போச்சி. போனப்புறம் பேச என்ன இருக்கு?” சொல்லிவிட்டு நகர்ந்தது ஞான மலை.

மறுநாள் மாலை தந்தி வந்தது. அதில் மிராசுதார் இறைவனடி சேர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதிர்ச்சி அடைந்த மடத்து சிப்பந்திகள் மேலும் பிரமிக்கும்படி பெரியவா சொன்னார்: “நான் அவனோட நேத்திக்கு பேசாததன் காரணம் கடைசியா அவனுக்கு என் நினைவாகவே இருக்கட்டும்னு தான். நான் பேசாததாலேயே அவன் என் நினைவாகவே இருந்தான்.” என்று கூறிய பிறகு தான் அவர்களுக்கு புரிந்தது 

“எல்லாம் முடிஞ்சி போச்சி. போனப்புறம் பேச என்ன இருக்கு?” என்று பெரியவா கூறியதன் அர்த்தம்.

பகவான் கீதையில் “கடைசி நேரத்தில் தன நினைவாகவே இருந்து உயிர் பிரிந்தால் தன்னையே வந்து அடைவதாக” சொல்கிறார் 

அல்லவா? அதனால் தான், தன் பக்தன் கடைசியில் தன நினைவாகவே இருந்து தன்னையே அடைந்து பிறவிப் பெருங்கடலை தாண்டட்டும் என்று அருள் செய்தார் போலும் 

நம் கீதாசார்யரான பெரியவா. பிறக்கும் போதும், வாழும்போதும், இறக்கும்போதும் எப்பொழுதும் அருள் செய்யும் கருணைக் கடல் நம் காஞ்சி மாமுனிவர்.

Tuesday 30 September 2014

""குரு என்பவர் யார்?"" - மஹா பெரியவாளின் அற்புதமான விளக்கம்

சாந்தோக்ய உபநிஷத்தில்தான் ''தத்வமஸி'' என்ற மஹாவாக்கியம் வருகிறது.
'' நீயேதானப்பா அந்த பிரம்மமாயிக்கிறாய் என்று ச்வேதகேதுவுக்கு அவனுடைய பிதா உத்தாலக ஆருணி திரும்ப திரும்ப ஒன்பது தடவை செய்த உபதேசம் அது.

தத்-த்வம்-அஸி = ''தத்'' என்பது பரமாத்மாவான பிரம்மம்; ''த்வம்'' என்பது ஜீவாத்மா; ''அஸி'' என்றால் இருக்கிறாய். பரப் ரம்மமாக இருக்கிறாய் - என்றைக்கோ ஒருநாள் அல்ல! எதிர்காலத்தில் இல்லை; இப்போதும் எப்போதும் எல்லோரும் எல்லாமும் பிரம்மம்தான். இனிமேலே தான் பிரம்மமாக வேண்டும் என்பதில்லை.

அப்படியானால் ஸாதனை எதற்கு? பிரம்மமாக இருந்தாலும் அதை நாம் தெரிந்து கொள்ளவில்லையே! தெரிந்தால் இத்தனை அழுகை, இத்தனை காமம், கோபம், இத்தனை பயம் நமக்கு இருக்கவே இருக்காதே! அலையே எழும்ப முடியாமல் ஆகாசம் வரை முட்டிக் கொண்டு நிற்கிற ஆனந்த சமுத்திரமாக அல்லவா இருப்போம்?

எனவே ''நீ எப்போதும் பிரம்மம் தானப்பா'' என்றால் எப்படி? அதைப் புரிய வைக்க ஒரு கதை: நமது வாழ்க்கையே எதாவது ஒரு கதையை நம்பி தானே நடக்கிறது. ப்ருஹதாரண்யக உபநிஷத் பாஷ்யத்தின் நடுவிலே (II-1-20) சங்கர பகவத் பாதாள், சிலந்தி தன்னிலிருந்தே நூலை இழுத்து வலை பின்னுகிற மாதிரியும், அக்னி தன்னிலிருந்தே பொறிகளை உதிர்க்கிற மாதிரியும் , ஆத்மாவிலிருந்தே
அத்தனை பிரபஞ்சமும் தோன்றியிருக்கிறது எனகிற மந்திரத்துக்கு ரொம்ப விஸ்தாரமாக அர்த்தம் பண்ணிக்கொண்டு போகிறபோது, இந்தக் கதை வருகிறது.

ஒரு ராஜகுமாரன் அவனது அப்பா அம்மா எதிரி ராஜாவின் படையெடுப்பில் கொல்லப்பட்டதால், உயிர் தப்பி மந்திரியால் காட்டில் வேடர்கள் பகுதியில் குழந்தையாக விடப்பட்டு இளம் வயதில் வேடர்களோடு வளர்கிறான். பெரியவனாகி, பின்னால் அவன், தான் ஒரு ராஜகுமாரன் என்று அவனை தப்பிக்க விட்ட மந்திரி மூலமே உணர்கிறான். இத்தனை காலமும் வேடப் பையனாகவே தன்னை நினைத்துக் கொண்டிருந்த காலத்திலும் அவன் ராஜா பிள்ளைதானே? இது முதலில் தெரியாததால் வேடன் மாதிரி வாழ்க்கை நடத்தினான். உண்மை புரிந்தவுடன் ,ராஜ குமாரனாகவே எப்போதும் இருந்தவன் ராஜகுமாரனாகவே அநுபவத்தில் வாழ்ந்து காட்டினான். வேடப்பையனும் ராஜகுமாரனும் இரண்டுபேர் இல்லை. ஒருத்தன் இன்னொருத்தனாக மாறவில்லை. ஒரே பேர்வழிதான். முதலில் தன்னை தெரிந்து கொள்ளவில்லை. புரியவில்லை. அப்புறம் புரிந்துகொண்டு விட்டான். புரியாத நிலையில் வேடனாக எங்கேயோ கீழ்நிலையில் வேடப்பையனாகி கிடந்தவன் புரிந்து கொண்டவுடன் ராஜகுமாரனாகினான். அப்புறம் எதிரி ராஜாவோடு சண்டை போட்டு ஜெயித்து ஸாம்ராஜ்யாதிபதி யாகவே ஆகிவிட்டான்.

நாமெல்லாருமே இந்த மாதிரி ''வேட'' வேஷத்தில் தான் உள்ளோம். ஜீவாத்மா என்ற வேஷத்தில் ஸம்ஸாரிகளாகவே நம்மை நினைத்துக் கொண்டிருந்தாலும் வாஸ்தவத்தில் நாமும் பரமாத்மாவேதான். வேஷம் எப்படியிருந்தாலும் உள்ளே இருக்கிற வஸ்து எப்போதும் பரமாத்மாதான். ஐம்புலன்களின் வசியத்தில் இழுக்கிற வழியில் ஒடி வேட்டையாடிக் கொண்டிருக் கிறோம். நாம் உண்மையில் பிரம்மம்என்று தெரிந்து கொள்ளலாமா? தெரிந்தால் மட்டும் என்ன? அநுபவத்தில் கொண்டுவர முடியாதபடி இந்திரியங்கள் (ஐம்புலன்கள்) இழுத்துக்கொண்டே இருக்கும். ராஜகுமாரனாகவே இருந்தாலும் வாஸ்தவத்தில் அரசத்தன்மையை அடைவதற்காக அவன் அஸ்திர சஸ்திர அப்பியாஸம் பண்ணி எதிரிகளை ஜயித்து ஸாம்ராஜ்யாதிபதியான மாதிரி, நாமும் பிரம்மமாகவே எப்போதும் இருந்தாலும் அதை உணராமலிருப்பதால் கர்மத்தில் ஆரம்பித்து பக்தி வழியாக, ஞான சாதனைகளைச் செய்து, உட்பகைகளை யெல்லாம் ஜயித்து, ஆத்ம ஸாம்ராஜ்யத்தில் ராஜாவாகஆகவேண்டும். 'ஸாம்ராட்'- அதாவது ராஜா - என்றே உபநிஷத்தில் ஆத்ம ஞானியைச் சொல்லியிருக்கிறது.

ஐஸும் ஸ்படிகமும் ஒரே மாதிரித்தான் வெளிப்பார்வைக்கு இருக்கின்றன. ஆனால் ஐஸ்தான் உருகி ஜலமாகுமே தவிர, ஸ்படிகம் ஜலமாகாது. ஏனென்றால் எது ஜலமாகவே இருந்து அப்புறம் உறைந்து வேறே வேஷம் போட்டுக் கொண்டிருக்கி றதோ அதுதான் உருகி மறுபடியும் தன்ஸ்வயமான பூர்வ ரூபத்தை அடைய முடியும். பிரம்மமே ஜீவனாக உறைந்து போயிருப்பதால்தான், இந்த ஜீவாத்மாவும் உருகிப் போனால்மறுபடியும் பிரம்மமாகவே அநுபவத்தில் ஆக முடிகிறது. ஐஸ் தானாக கரைகிறது. நாம் கரைய மா ட்டோம் என்கிறோம். அது தான் வித்தியாசம்.

''கல்லேனும், ஐயா, ஒரு காலத்தில் உருகும் என் கல்நெஞ்சம் உருகவில்லையே! -- தாயுமான ஸ்வாமிகள் நமக்காகத்தான் பாடியிருக்கிறார்.நம்மை உருக வைக்க ஒன்று தேவைப்படுகிறது. கதையில் ராஜகுமாரனை Practical- ஆக ராஜகுமாரனாக்குவதற்காக ஒரு மந்திரி வந்த மாதிரி,நம்மை உருக்கி நிஜ நாமாகப் பண்ண ஒருத்தர் வேண்டும். அவன் வரமாட்டேன் என்று முரண்டு செய்தாலும் வலிய இழுத்த மந்திரி மாதிரி,பாரமார்த்திகத்தின் பக்கமே போகமாட்டேன் என்ற அடம்பிடிக்கிற நம்மைக் கட்டி இழுக்க ஒருத்தர் வேண்டும். அப்படி ஒருத்தர் இருக்கிறாரா? நம்மை நம்முடைய நிஜ ''நாமா'' க ஆக்கக்கூடிய ஒருத்தர் இருக்கிறாரா?

இருக்கத்தான் செய்கிறார். வேடப் பையனுக்கு நீதானப்பா ராஜகுமாரன் என்று சொல்லிப் புரியவைத்து, அவனுக்கு அஸ்திரப் பயிற்சி கொடுத்து,அவனை ராஜாவாக்குவதற்காகஅவனை விட ஜாஸ்தி உழைத்த மந்திரி இந்த ஒருத்தருக்குத்தான் ரூபகம். (உருவகம்) . நமக்கு நம் '' பரமாத்ம'' த்வத்தை எடுத்துச் சொல்லி, அதை நாம் அநுபவமாக்கி கொள்வதற்கான ஸாதனைகளைச் செய்ய வைத்து, நம் கர்மா பாக்கி தீருவதற்காக தாமே தபஸைச் செலவு செய்து உபகாரம் பண்ணும் அந்த ஒருத்தர் தான் குரு என்பவர்.


Sunday 3 August 2014

​பஞ்சாயதான பூஜை - மஹா பெரியவா

தென்புலத்தார், தெய்வம் என்று குறள் சொல்வதில் இரண்டாவதான தேவ காரியத்துக்கு வருகிறேன்.

ஒவ்வொரு குடும்பத்திலும் ஈசுவர பூஜை நடக்க வேண்டும். செனகரியப்பட்டவர்கள் விஸ்தாரமான பூஜைகளை எடுத்துக் கொண்டு செய்யலாம். செனகரியமில்லாவிடில் சுருக்கமாக செய்தாலும் போதும். பத்தே நிமிஷம் போதும்.ஆபீடுக்குப் போகிறவர்களும் இப்படிச் சுருக்கமாகவாவது பூஜை என்ற ஒன்றை செய்ய வேண்டும். எல்லாக் குடும்பத்திலும் ஒரு மணிச் சத்தம் கேட்க வேண்டும்.

ஈசுவரன், அம்பாள், விஷ்ணு, விநாயகர், சூரியன் இந்த ஐந்து பேருக்கும் மூர்த்தி வைத்துப் பூஜை செய்ய வேண்டும். இதற்குப் பஞ்சாயதான பூஜை என்று பெயர். அங்கங்களோடு விக்கிரகங்களாக இல்லாமல் இந்த ஐந்தையும் இயற்கையாகவே கிடைக்கும் ஐந்து வஸ்துக்களில் ஆவாஹனம் செய்து பூஜை செய்வது சம்பிரதாயம்.

இவற்றில் ஈசுவரனுக்குரிய பாண லிங்கம் நர்மதை நதியில் ஓங்கார குண்டத்தில் கிடைக்கிறது. அம்பிகையின் ஸ்வரூபமான ஸ்வர்ணமுகி சிலா என்ற கல் ஆந்திராவில் ஸ்வர்ணமுகி ஆற்றில் கிடைக்கிறது. அது தங்க ரேக் ஒடிய கல். விஷ்ணுவின் வடிவமான ஸாலக்கிராமம் நேபாளத்தில் கண்டகி நதியில் அகப்படுகிறது. சூரியனுக்கிறிய ஸ்படிகம் தஞ்சாவூரில் வல்லத்துக்குப் பக்கத்தில் கிடைக்கிறது. விநாயகருக்கு உருவான சோணபத்ரக் கல், கங்கையிலே கலக்கிற சோணா (ஸோன் என்பார்கள்) நதியில் அகப்படுகிறது. ஆக, இந்த ஐந்தையும் ஒரிடத்தில் வைத்தால் இந்தத் தேசம் முழுவதையுமே ஒன்று சேர்த்து வைத்தது போல் ஆகும்.

இந்த ஐந்தில் ஒன்றுக்காவது கண், மூக்கு, காது இல்லை. எனவே, இடுக்குகளில் அழுக்கேறுவது கிடையாது. அபிஷேகம் செய்து துடைக்க நாழியே ஆகாது. எல்லாம் சின்னச் சின்ன கற்கள்.எல்லாமாகச் சேர்ந்தாலும் கொஞ்சம் இடத்தைத்தான் அடைத்துக் கொள்ளும். பெரிய பூஜா மண்டபம் கூடத் தேவையில்லை. ஒரு சின்ன சம்புடத்தில் போட்டு வைத்து விடலாம். ஆவாஹணம் பண்ணி, சந்தனம், குங்குமம் அக்ஷதை வைத்து, அர்ச்சனை செய்து நைவேத்தியம் காட்டலாம்.

வெளியூருக்குப் போதும்போதுகூடப் பத்து நிமிஷம் இப்படிப் பூஜை செய்வதில் சிரமமில்லை. வெளியூரில் அர்சனைக்குப் பூ கிடைக்குமா என்று கவலைப்பட வேண்டாம். வில்வத்தையும், துளசியையும் உலர்த்தி வைத்துக் கையில் எடுத்துப் போனால் ஈசுவரனையும் விஷ்ணுவையும் அதனாலேயே அர்ச்சிக்கலாம். மற்றவர்களுக்கு அக்ஷதையால் அர்ச்சனை செய்யலாம். நைவேத்தியத்துக்கு சுத்தமான அன்னம் வெளியூர்களில் கிடைக்குமா என அலட்டிக்கொள்ள வேண்டாம். காய்ந்த திராக்ஷைப் பழத்தைக் கையோடு வைத்திருந்து நிவேதித்து விடலாம்.

ஐந்து மூர்த்திகள், துளஸி - வில்வ பத்திரங்கள், திராக்ஷை, அக்ஷதை இந்த எல்லாவற்றையுமே கையடக்கமாக ஒரே சம்புடத்தில் போட்டு வைத்துக் கொண்டு விடலாம்.

இந்த ஐந்து மூர்த்திகளுக்குச் செய்வது பஞ்சாயதன பூஜை எனப்படும். பிராசீனமாக நம் தேசத்தில் இருந்து வந்த இந்தப் பத்ததியை சங்கர பகவதி பாதாள் புது ஜீவனோடு பிரகாசிக்கும் படியாகச் செய்தார். ஷண்மத ஸ்தாபனம் என்று வருகிறபோது இவற்றோடு சுப்பிரமணிய உபாஸனையையும் நிலை நாட்டினார். எனவே, மேலே சொன்ன ஐந்தோடு நாமும் ஒரு வேலை வைத்து வேலாயுதனை பூஜிக்கலாம்.

பூஜை என்பதற்காக பெரிய சிரமம் எதுவும் தேவையில்லை. மனசு இருந்தால் வெகு சுலபத்தில் எல்லோரும் எங்கேயிருந்தாலும் பூஜை செய்யலாம் என்பதற்காக இவ்வளவு சொன்னேன்.

வீட்டிலே இருந்தால் மகா நைவேத்தியம் எனப்படும் அன்னத்தை ஸ்வாமிக்குக் காட்ட வேண்டியது அவசியம். நாம் அநுபவிப்பதற்காகப் பிரபஞ்சம் முழுவதையும் ஈசுவரன் நமக்கென விட்டிருக்கிறார். பலவிதமான போக்கிய வஸ்துக்களை வெளியிலே உண்டாக்கி, அவற்றை அநுபவிக்கிற இந்திரியங்களை நம்மிடம் வைத்திருக்கிறார். எனவே, நாம் அநுபவிப்பதையெல்லாம் அவருக்குச் சமர்ப்பித்துவிட்டே உபயோகித்துக் கொள்ள வேண்டும். உண்மையில் அவருக்கே என்றா அன்னத்தைக் கொடுத்து விடுகின்றோம். வெறுமே அவரிடம் காட்டுகிறோம். பிறகு நாம்தான் புசிக்கிறோம்.

நைவேத்தியம் செய்தால் ஸ்வாமி எங்கே சாப்பிடுகிறார் என்று சிலர் கேலியாகக் கேட்கிறார்கள். நிவேதனம் என்றால் ஸ்வாமியைச் சாப்பிடவிடுவது என்று அர்த்தமேயில்லை. அவருக்கு சாப்பிட்டு ஒன்றும் ஆக வேண்டாம். நம் நினைவினை சுத்தமாக்கிக் கொள்ளத்தான் பூஜை முழுவதுமே தவிர, அவருக்கு இதனால் ஆவது ஒன்றுமில்லை. 'நிவேதயாமி' என்றால் "அறிவிக்கிறேன்" என்று அர்த்தமே தவிர, உண்பிக்கிறேன் என்று அர்த்தமில்லை. அப்பனே, இந்த வேளைக்கு உன் கருணையில், இந்த அன்னத்தைக் கொடுத்திருக்கிறாய் என்று அவனுக்குத் தெரிவித்துவிட்டு அவனுடைய நினைவோடு உண்ண வேண்டும். அவன் அருள் இல்லாவிட்டால் இந்த அரிசி எப்படி விளையும். ஸயன்ஸ் நிபுணர் அரிசி வகைகளை ஆராய்ந்து பெரிய பெரிய புஸ்தகங்கள் எழுதலாம். ஆனால் அவரால் ஒரு மணி அரிசியைச் செய்யமுடியுமா. செய்ற்கை அரிசி (Synthetic rice) என்று ஒன்றைச் செய்ய முடிந்தால்கூட இதற்கு மூலமாக கெமிகல்ஸ் ஏற்கனவே பகவத் சிருஷ்டியில் இருந்துதானே வந்தாக வேண்டும். எனவே மனிதன் செய்ததாகத் தோன்றும் எல்லாமும்கூட முடிவிலே ஈஸ்வரன் சிருஷ்டித்ததுதான். பரமேஷ்வரனால் கொடுக்கப்பட்டதை அவனுக்குக் காட்டாமலே நாம் அநுபவித்தால் திருடர்களாகின்றோம்.

எங்கும் இருக்கும் அவன், நாம் இருக்கச் சொல்லும் இடத்தில், நாம் கிரகிக்கும்படி நிற்பான். கல், மண், செம்பு முதலிய எந்த பிம்பத்தில் வைத்துக் கூப்பிட்டாலும் வருவான். அப்படிப்பட்ட யோக்கியதையும், கருணையும் அவனுக்கு நிச்சமாக இருக்கிறது. இல்லை என்றால் அப்படிப்பட்ட ஸ்வாமி நமக்கு வேண்டவே வேண்டாம்.

அவனைப் பூஜை என்று வைத்து ஒவ்வொரு குடும்பத்திலும் கூப்பிட்டு, அவனால் கொடுக்கப்பட்டதை உபயோகிக்கிறோம் என்று அன்றாடம் அறிவிக்க வேண்டும். இப்படிச் செய்து வந்தால் ஈஸ்வரனுக்கு நிவேதனமாக அர்ப்பிக்கத்தக்கதைத்தவிர வேறெதையுமே நாம் உபயோகிக்கக்கூடாது என்ற பக்குவம் நாளடைவில் உண்டாகும். நல்லவர்களாவோம்.

Thursday 24 July 2014

"நானும் நீயும் ஒண்ணுதான்" - மஹா பெரியவா தரும் அற்புத விளக்கம்

வேத சாஸ்திர இதிகாச புராணங்களில் பெரியவா
எப்படிப்பட்ட மேதாவி என்பதை உலகம் நன்கறியும்.
ஒரு சதஸ் நடக்கிறது. தட்சிணாமூர்த்தியின் சின்முத்திரை
குறித்து ஒரு பண்டிதர் மூன்று மணி நேரம் பேசினார்.
அது முடிந்ததும் பெரியவா, "எதைப் பற்றி பேசினாய்?"
என்று கேட்டார். "சின்முத்திரையின் தாத்பர்யம்!"
என்றதைக் கேட்டு, "ஒரு சின் முத்திரையில் இத்தனை
விஷயமா? மூணு மணி நேரம் பேசினியே.....எல்லாரும்
புரிஞ்சிண்டாளா?" என்றார்.

"புரிஞ்சிண்டாளா இல்லையான்னு எனக்கெப்படித் தெரியும்?"
என்றார் அவர். அதற்குப் பெரியவா, "நாம் சொல்வதை
சரியாக புரிந்து கொள்கிறார்களா,இல்லையா என்பதைக்
கேட்பவர் முகபாவத்தைப் பார்த்தே புரிந்து கொள்ளலாம்.
அது தெரியாமல் பேசிக்கொண்டே போவதில் பயனில்லை.
கேட்பவர் திறமையை எடை போட்டு அதற்கு ஏற்றாற்போல்
பேச வேண்டும்!" என்றெல்லாம் அறிவுரைகள் தந்தார்.
அதன் பிறகு, "நீ இப்ப சொன்னயே சின்முத்திரை-அதற்கு
எனக்குத் தெரிந்த அர்த்தம் சொல்லட்டுமா..." என்று
அடக்கமாக கேட்டு விட்டுத் தொடங்கினார்.
"அடுத்தவாளைக் காட்டும் ஆள்காட்டி விரலும்,
'நான்' என்ற எண்ணத்தைக் காட்டுவது போல் தனித்துத்
தடித்து நிற்கும் கட்டை விரலும் சேர்ந்து-
"நானும் நீயும் ஒண்ணுதான்!"
என்று தட்சிணாமூர்த்தி ஸ்வாமி சொல்வதாகக்
கொள்ளலாமா?" என்றார்.

கேட்ட பண்டிதர் அவர் காலடியில் விழுந்து.
"இதுதான் சரியான பொருள்!" என்று சொல்லிச் சொல்லி உருகினார்
"இனிமேல் நான் பேசக் கத்துக்கணும்...
எனக்கு சரியாக வெளியிடத் தெரியவில்லை,
அனுக்கிரகம் பண்ணணும்!" என்று வேண்டிக் கொண்டார்.

வாழை நமக்கு காட்டும் ஞானோபதேசம் - மஹா பெரியவா


வாழ்வு' என்ற வார்த்தை ஸம்பந்தமானதே 'வாழை'.
('பீபிள்ஸ் ஃப்ரூட்!'-People Fruit)

பெரியவாள் போடும் சாப்பாட்டு விருந்தை சாப்பிட்டு முடிக்கிறோம். இலை போட்டு அதில்தானே விருந்தைப் படைப்பது? அந்த இலையைத் தரும் வாழை ஜாதி பற்றி அவர் வாய்மொழி கூறாது முடிக்கலாமா?

'மர ஜாதியில் வாழை ரொம்பச் சின்னதான ஒன்றுதான். ஆனால் பெரிய பெரிய மரங்களுக்கும் இலை துளியளவே இருக்கும்போது இதற்குத்தான் 'போட்டுக் கொண்டு சாப்பிடுகிற' அளவுக்குப் பெரிசாக இலை! அப்படி, தாய் மனஸோடு சாதம் போட்டுப் பார்க்கிறதாலேதான் வாழையை நம் ஸம்பிரதாயத்தில் உசத்தி வைத்திருக்கிறது.

'எத்தனையோ பழங்கள் நல்ல ருசியாக, தேஹாரோக்யம், புஷ்டி தருவதாக இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அதில் வாழை ஒன்றைத் தவிர எதையாவது அதையே முழுச் சாப்பாட்டுக்குப் பதிலாகச் சாப்பிட முடிகிறதோ? முப்பழங்களில் மீதி இருக்கிற மா, பலாப்பழங்களைக் கூட வயிறு ரொம்புகிற மாதிரிச் சாப்பிட முடிகிறதோ? ஒரு வேளை ஆப்பிள் அப்படி இருக்கலாம் ஆனால் அது பணம் படைத்தார்களுக்கு மட்டுந்தான் கட்டுப்படியாகும். சர்வ ஜனங்களும் காசு கொடுத்து நாலு பழம் வாங்கிச் சாப்பிட்டு வயிறு 'தம்' மென்று நிறையும்படி இருப்பது வாழைதான். அதுதான் (சிரித்து) 'பீபிள்ஸ் ஃப்ரூட்!'

வாழைப்பழம் ஆஹாரம் என்றால், வழைப் பூ மருந்து. பழமாகும்போது தித்திக்கிற அது பூவாக இருக்கும்போது துவர்க்கிறது. துவர்ப்புப் பண்டங்களே உடம்புக்கு ரொம்ப நல்லது. பூஞ்சைக் குடலுக்குக் கூட வாழைப் பூ ஏற்றது.

மற்ற பூக்கள் வாஸனை. வழைப் பூ மட்டும் அப்படியில்லை. வாஸனா ஸஹிதம், வாஸனா க்ஷயம் என்று வேதாந்தத்தில் சொல்கிறார்களே, அதைக் காட்டுவதாக இது இருக்கிறது. இன்னும் வேதாந்தமாக ஒன்று. விதை போடாமல் முளைப்பது அது. கர்மா விதையிலேதான் ஜீவன் மறுபடி, மறுபடி பிறந்து, வினையைப் பிறவி தோறும் விதைத்துப் புனர்ஜன்மங்கள் எடுத்துக் கொண்டே இருப்பது. அந்த வித்து அடிபட்டுப்போன ஞானத்தை வாழை நினைவூட்டுகிறது.

இப்படிச் சொன்னதால் அது வாழ்க்கைக்கு ஸம்பந்தப்படாதது என்று அர்த்தம் இல்லை. வாழ்கிற மட்டும் நல்லபடி வாழ்வதற்கும் அதுதான் பாடம் போதிப்பது.

'வாழ்வு' என்ற வார்த்தை ஸம்பந்தமானதே 'வாழை'. நம்முடைய வாழ்க்கையில் கொஞ்சமும் வீண், வ்ருதா இல்லாமல் முழுக்கப் பிரயோஜனமாக இருக்க வேண்டுமென்பதுதானே 'ஐடியல்'? அந்த 'ஐடிய'லை ரூபித்துக் காட்டுவதாக இருப்பது வாழை. தண்டு, பட்டை, தார் உள்பட, இலை, பூ, காய், பழம் என்று அதன் ஸர்வாங்கமும் பிரயோஜனமுள்ளதாக இருக்கிறதல்லவா? ஆனபடியால், 'வாழ்க்கை' 'வாழ்வு' என்று அதற்கே பெயர் வைக்கிற அபிப்பிராயத்தில்தான், 'வாழை' என்று பெயர் வைத்தது.
அதை வாழை மரம் என்கிறோம். மரம் என்றால் அது சொர சொரவாக இருப்பதுதானே வழக்கம்? இது ஒன்று மாத்திரம் வழவழாவாக இருக்கிறது! கரட்டு முரட்டுத்தனமில்லாமல் மழமழவென்று எல்லாவித மனுஷ்யர்களுக்கும் ஸந்தர்ப்பங்களுக்கும் அநுகூலமாக நம்மைப் பண்ணிக்கொள்ள வேண்டும் என்பதை உபதேசிக்கிறதே அந்த வழவழ. வழவழப்பை வைத்தும் அதற்கு 'வாழை' என்று பெயர் கொடுத்திருக்கலாம்.

விதையாகி வம்ச விருத்தி ஏற்படுத்திக் கொள்ளும் மா, ஆல், இன்னும் அநேக வ்ருக்ஷங்களில் கணக்கு வழக்கில்லாமல் விதைகள் தோன்றுகின்றன. அது ஒவ்வொன்றும் முளைத்தால், இந்த பூமியே ஒரு வ்ருக்ஷ ஜாதிக்குக்கூடப் போதாது. அப்படி நடக்காததால் அந்த விதைகளில் பெரும்பாலானவை முளைப்பதில்லை என்று தீர்மானமாகிறது. முளைத்திருப்பதிலும், எந்தக் கன்று எந்தத் தாய் மரத்தின் விதையிலிருந்து முளைத்திருப்பது என்பது எவருக்கும் சொல்லத் தெரியாததாக இருக்கிறது. வாழையில்தான் தாய் மரத்தைச் சுற்றியே அதன் கன்றுகள் முளைப்பதால் இதிலிருந்து இது பிறந்தது என்று தீர்மானமாகத் தெரிகிறது. கன்று பிறந்ததோடு தாய் வாழ்க்கையை முடித்துக் கொண்டு விடுகிறது. ஸத்பிரஜை உண்டான அப்புறம் தாம்பத்யம் இல்லாமலிருந்து ஸந்நியாஸம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நமக்கு தர்ம சாஸ்திரம் சொல்கிறதென்றால், வாழையோ அதைவிட ஞானத்துடன் பெரிய ஸந்நியாஸமாகப் போயே போய் விடுகிறது. இங்கே வேதாந்தம். இதிலேயே வாழ்க்கைத் தத்துவமும்! நல்ல ப்ரயோஜனமுள்ள ஒரு வாழை, அதே ப்ரயோஜனத்திற்காக லோகத்திற்குத் தரும் ப்ரஜைகளான கன்றுகளை, இந்தப் ப்ரஜை இந்த அம்மாவுக்குப் பிறந்தது என்று நமக்கெல்லாம் காட்டும்படி இருக்கிறதல்லவா? வேறே எந்த மரத்தின் விஷயமாகவும் அப்படி இல்லையே! அதனால்தான் ?வாழையடி வாழையாக வாழ்? என்று வாழ்த்துவதாக இருக்கிறது! அந்த வாழ்த்துக்கு அடையாளமாகவே கல்யாணங்களிலும் மற்ற மங்கள வைபவம் எதிலுமே வாழை கட்டுவதாக ஏற்பட்டிருக்கிறது. வாழை மரம் மங்களச் சின்னம்.

Wednesday 23 July 2014

மங்களாரம்பம் - பெரிய இடத்துப் பிள்ளை - மஹா பெரியவா


குழந்தை வழியே உலகப் பெற்றோரிடம்

ஒரு சின்னக் குழந்தையானால் கூட, அது ரொம்பவும் பெரிய மநுஷ்யாள் விட்டுக் குழந்தையாயிருந்து விட்டால் அதனிடம் எல்லோரும் அன்பு காட்டிக் கொஞ்சுவார்கள். அதற்குப் பயப்படக்கூடச் செய்வார்கள். பழைய நாளில் 'ராஜாப்பயல்'என்று அன்போடும் பயத்தோடும் சொன்னார்கள் . அப்புறம் 'கலெக்டர் அகத்துப் பிள்ளையாக்கும்'என்று சொல்லி வந்தார்கள். இப்போது 'மந்திரி-எம். எல். ஏ. வீட்டுப் பிள்ளை'என்று சொல்கிறார்களோ என்னவோ? பெரிய மநுஷ்யாள் குழந்தை என்றால் அது ஏதாவது சண்டித்தனம் பண்ணினால்கூட, மற்ற குழந்தைகளை அதட்டுகிற மாதிரி அதட்டாமல் அது கேட்பதைக் கொடுத்து விடுவார்கள். ஏன் என்றால், இந்தக் குழந்தை போய், ரொம்பவும் செல்வாக்குள்ள அதன் தகப்பனாரிடம் ஒருத்தரைப் பற்றி ஏதாவது புகார் பண்ணிவிட்டால், அவ்வளவுதான், அந்த ஆசாமிக்கு இந்தத் தகப்பனர்காரரிடமிருந்து பெரிய உபத்ரவங்கள் வந்து சேரும் எவரும் தங்களையே திட்டினால் கூடப் பொறுத்துக் கொள்ள கூடும் போனால் போகிறதென்று விட்டுவிடலாம். ஆனால், காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்கிறார்களே, அப்படி ரொம்பவும் அருமையாக இருக்கப்பட்ட தங்கள் குழந்தையை யாராவது ஏதாவது சொல்லிவிட்டார்களானால் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடும். இப்படி ஒரு பெரிய மநுஷ்யர் கோபித்துக்கொண்டு கிளம்பினால் ரொம்ப ஆபத்து அல்லவா?

அதனால்தான் " இது பெரிய இடத்துப் பிள்ளை அப்பா இதனிடம் வம்புக்குப் போகப்படாது" என்று சொல்வது.

இதற்கு நேர் எதிராக, ஒரு குழந்தையை மெச்சி விட்டால் அதன் தகப்பனாருக்கு அவரையே மெச்சுவதைவிட ஸந்தோஷமாய்விடும் உச்சி குளிர்ந்துவிடும். இப்படி ஒரு பெரிய மநுஷ்யரை ப்ரீதி செய்து விட்டால் ஸுலபமாக அவரிடமிருந்து பெரிய பெரிய லாபங்களைப் பெற்றுவிடலாம். பெரியவர்களை நேராக த்ருப்தி செய்வது கஷ்டம். குழந்தைகளையோ ரொம்பவும் எளிதில் த்ருப்தி படுத்தி விடலாம். ஓரு சின்னச் சொப்பையோ சாக்லேட்டையோ காட்டிவிட்டால் போதும். இல்லாவிட்டால் ஏதோ கொஞ்சம் கோணங்கி விளையாட்டுக் காட்டினால் அதிலேயே ஒரு குழந்தைக்குக் குஷி பிறந்துவிடும். அந்தக் குழந்தையின் ஸந்தோத்தில் அதன் அப்பாவுக்கும் ஏக ஸந்தோஷம் உண்டாகிவிடும். தன் குழந்தையை ஸந்தோஷப்படுத்தினவருக்குத் தன்னாலன எல்லா நன்மையும் பண்ணிவிடுவார். அதாவது, ஸுலபத்தில் திருப்திப்படுத்த முடியாத ஓரு பெரியவரால் நமக்கு ஓரு காரியம் ஆகவேண்டுமானால் அதற்கு வழி ஈஸியாக த்ருப்தியாகிவிடும். அவருடைய குழந்தையை ஸந்தோஷப்படுத்துவதுதான்.

இதனால் என்ன ஏற்படுகிறது? நமக்கு எல்லாவிதமான நன்மைகளையும் ஒன்றுகூடப் பாக்கியில்லாமல் செய்வதற்கு சக்தி படைத்த பெரிய மநுஷ்யராக ஒருத்தர் இருந்து, அவருக்கு ஒரு குழந்தையும் இருந்து விட்டதானல் போதும், நமக்கு ஒரு கஷ்டமே இல்லை. அந்த குழந்தையைப் பிடித்து நாம் ஸுலபத்திலே குஷிப்படுத்தி விட்டாலே போதும், அந்த மஹா பெரிய மநுஷ்யரிடமிருந்து நாம் கொஞ்சங்கூட ச்ரமமேயில்லாமல் பெரிய பெரிய லாபங்களைப் பெற்றுவிடலாமென்று ஏற்படுகிறது.

இப்படியிருக்கூடிய மஹா பெரிய இடத்துப் பிள்ளையார் என்று பார்த்துக் கொண்டே போனால் ஊர்ப் பெரிய மநுஷ்யருக்கு மேலே ஜில்லாவின் பெரிய மநுஷ்யர், அவருக்கு மேலே மாகாணத்தின் (மாநிலத்தின்) பெரிய மநுஷ்யர் என்று போய்க் கொண்டேயிருக்கும். முடிவாக ஸமஸ்த லோகத்துக்கும் எவன் ராஜாவோ அந்தப் பரமேச்வரனிடம் போய் நிற்கும். ராஜராஜேச்வரி என்றே பெயரிருக்கிற அம்பாள் - ஈஸ்வரன் என்ற தம்பதிதான் எல்லாருக்கும் உச்சியில் இருப்பார்கள். அப்போது நாம் முடிவாக நிற்கும் " பெரிய இடத்துப் பிள்ளை " யார் என்று பார்த்தால், பிள்ளையார்தான் என்று தெரியும்.

Saturday 12 April 2014

உயிரெலாம் உருகுதே உனது புகழ் பாடவே... மனமெலாம் மருகுதே உனது முகம் காணவே...


தினமும் காலை சங்கரா தொலைக்காட்சியில் நாமெல்லோரும் பார்த்துக் கொண்டிருப்பதுதான்... ஆனாலும் அலுப்பதில்லையே.... 

நாம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த இம்மஹானை மீண்டும் மீண்டும் காணக் கண் கோடி வேண்டும்...

தாயாய் வந்தாய் ஆதிசிவ சங்கரா...
தவமாய் நின்றாய் பரமசிவ சங்கரா... 

Click/Copy this below link and paste to get the song about Mahaperiyavaa...
http://www.dailymotion.com/video/k207hqNeingkSq6Mhgk?start=25

ஆஹா....ஆனந்தம் பேரானந்தம்.....

உயிரெலாம் உருகுதே உனது புகழ் பாடவே...
மனமெலாம் மருகுதே உனது முகம் காணவே...

வேதங்கள்-நாதங்கள் நீ போற்றுவாய்...இறைவா...!!!
பாபங்கள், சாபங்கள் பறந்தோடவே துணைவா...
அனைத்தையும் அறிந்திடும் ஜகத்குருவே நீயே....

தாயாய் வந்தாய் ஆதிசிவ சங்கரா...
தவமாய் நின்றாய் பரமசிவ சங்கரா...

நீரோடையாய் நடந்தாய்...
பார் முழுவதும் கலந்தாய்...
ஏற்றினாய்...ஞானஒளி ஏற்றினாய்...
கார்மேகமாய் படர்ந்தாய்...
குருணை மழையென பொழிந்தாய்... தூயவா...

துறவு கொண்ட பாலசேகரா....
சங்கரா.. ஜெய சங்கரா
தண்டம் ஏந்திய தாண்டவா....
குருவாய் வருவாய் நடராஜ ரூபனே
திருவாய் மலர்வாய் நீ.... லோக சாந்தனே...

சங்கரா...சங்கரா...
சங்கரா.. ஜெய சங்கரா ..

உயிரெலாம் உருகுதே உனது புகழ் பாடவே...
மனமெலாம் மருகுதே உனது முகம் காணவே...

Monday 3 March 2014

லோக வாழ்க்கைக்கு ஆதாரமே நம் பூர்வாசாரங்கள் - மஹா பெரியவா

ஆசாரத்தால்தான் டிஸிப்ளின் எனும் மனநெறி ஏற்படுகிறது. ஆசாரம் வெளிவிஷயம் என்பது சுத்தப் பிசகு. அதனால்தான் மனஸில் உத்தமமான பண்பும், உயர்ந்த கட்டுப்பாடும் உண்டாகிறது. மநுஷ்யனின் மனநெறி நன்றாயிருந்து விட்டால் அதன் சக்தி ஸாமான்ய மானதில்லை. அது இவனுடைய 'நேச்சர்' என்னும் இந்திரிய வேகங்களை அடக்கியாள்வது மட்டுமில்லை; வெளி 'நேச்சரை'யே அடக்காயாண்டு விடுகிறது. பிராம்மணன் அத்யயன ஆசாரத்தை அநுஷ்டித்தால் அதற்காகவே மும்மாரிகளில் ஒன்று பெய்கிறது என்பது தமிழ் மூதுரை; வேதம் ஓதிய வேதியர்க்கோர் மழை.

இப்படியே பதிவ்ரதைகளின் கற்பு நெறியினால் இயற்கை இன்னொரு மழையைப் பெய்கிறது என்று சொல்கிறது: மாதர் கற்புடை மங்கையர்க்கோர் மழை.

இதையே இப்போது பகுத்தறிவாளர்களும் கொண்டாடும் திருக்குறளும் சொல்கிறது:

"தெய்வம் தொழான் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை"

ராஜா நீதி நெறிப்படி ஆட்சி பண்ணுவதும் ஒரு மழையை வரவழைத்துவிடும் :

"நீதி மன்னர் நெறியினர்க்கோர் மழை" இதற்கு மறுதிசையில், இவர்கள் நெறி தப்பினால் இயற்கையும் கன்னா பின்னா என்ற பண்ண ஆரம்பிக்கும்.

வள்ளுவரே சொல்கிறார்: ராஜா நீதிமுறை தப்பினால், பிராம்மணனும் தன் ஆசாரமமான அத்யயனத்தை மறந்துவிடுவான் - அறுதொழிலோர் நூல் மறப்பர். ஒருத்தன் முறை தப்பினால் மற்றவர்களும் முறை தப்பிப் போய்விடுவார்களென்று எச்சரிக்கிறார். இப்படி மநுஷ்யனுக்கு மநுஷ்யன் மனநெறி கெட்டுப்போவதால் பாதகமான பலன் தொடர்ந்து போவது மட்டுமில்லை. ராஜா தன் ஆசாரத்தை விட்டால் பால் வளமும் குன்றிவிடும்: ஆ பயன் குன்றும் என்று 'தெய்வப்புலவர்'என்னும் திருவள்ளுவர் சொல்கிறார். இதற்குப் பகுத்தறிவு பதில் சொல்ல முடியாது.

மாற்ற முடியாதவை என்கிற Natural Forces -ம் (இயற்கைச் சக்திகளும்) மநுஷ்யனின் மனநெறிக்கு அடங்கியவைதான்.

ஒரே ஈஸ்வரனின் தர்ம ஸ்வரூபந்தான் (வெளி) இயற்கையில் இருக்கிற மஹத்தான ஒழுங்குக் கட்டுப்பாடு, மநுஷ்ய மனஸின் தர்மக் கட்டுப்பாடு இரண்டாகவும் ஆகியிருப்பது. இதிலே மநுஷ்யன்தான் மனமறிந்து மனஸின் தர்மத்தை உண்டாக்கிக் கொண்டு, அதில் ஈஸ்வர ஸாந்நித்யத்தை வரவழைத்துக் கொள்ள முடியும். அந்த திவ்ய சக்தியால்தான் (வெளி) இயற்கையும் இவன் கட்டியாள முடிவது.

நெறிதான் ஸூ¨ர்யனை, சந்திரனை, வாயுவை, gravity -ஐ ஆர்டரில் நிறுத்தி வைத்திருக்கிறது. 'ஃபிஸிக்ஸ்'மட்டுமில்லை. மனஸ் நன்றாயிருந்தால்தான் இவை லோகாநுகூலமாக நன்றாயிருக்கும். ஜனங்கள் மனஸ் கெட்டுப் போனால் இயற்கையிலும் உத்பாதங்கள் ஜாஸ்தியாகும் என்று 'சரக ஸம்ஹிதை' என்ற ஆயுர்வேத சாஸ்த்ரம் சொல்கிறது.

நெறியில் சிறந்தவர்கள் என்னென்ன அற்புதங்கள் பண்ணினார்கள் என்று கதை புராணங்களில் எத்தனையோ பார்க்கிறோம். 'பெய்யெனப் பெய்யும் மழை' என்கிற மாதிரியே 'பாய் எனப் பாயும் அக்கினி'யைப் பற்றி கண்ணகி கதை சொல்கிறது. அதே மதுரையில் ஞான ஸம்பந்தரும் அவர் தங்கியிருந்த மடத்திற்குச் சமணர்கள் வைத்த நெருப்பு, அவர்களை ஆதரித்த பாண்டிய ராஜாவையே (இறுதியில் அவன் நல்வழிப்படுவதற்கு ஆரம்ப தண்டனையாக) தாக்கவேண்டும் என்று ஈஸ்வரனைப் பிரார்த்தித்தவுடன் அவனிடம் வெப்பு நோய் உருவில் போய்ச் சேர்ந்தது.

Action and reaction are equal and opposite (செயலும் பிரதிச் செயலும் ஸமசக்தி வாய்ந்ததாகவும் எதிரிடையானதாகவுமிருக்கும்) என்ற 'ந்யூடன் லா'எல்லாக் கார்யங்களையும் பற்றின 'கர்மா தியரி'யை அடிப்படையாகக் கொண்டது என்பது மட்டுமில்லை;எண்ணத்தின் பிரதிபலனையும், மன நெறியின் சக்தி மற்ற மனங்களின் மீது மட்டுமின்றி 'நேக்சுரல் ஃபோர்ஸஸ்' மீதும் பிரதி விளைவுகளை உண்டாக்குவதையும் அடிப்படையாகக் கொண்டதுதான். Mental plane , metaphysical plane , physical plane (மன மட்டம், பௌதிகாதீதமான ஆத்மிய மட்டம், பௌதிக மட்டம்) மூன்றையும் கோத்து நம் மதத்தில் சொன்னதை physical plane -ல் (பௌதிக மட்ட்ததில்) மட்டும் சொல்வதே ந்யூடன் லா. 'ரியாக்ஷன் ஆப்போஸிட்'டானது (பிரதிச் செயல் எதிரிடையானது என்று அவர் சொன்னது நல்லதற்கு எதிர் விளைவாகக் கெட்டதும், புண்யத்துக்குப் பிரதியாகப் பாபமும் உண்டாகும் என்று அர்த்தம் கொடுக்காது. பின்னே 'ஆப்போஸிட்'என்று ஏன் சொன்னாரென்றால், ஒரு பந்தைச் சுவர் மேல் எறிந்தால் அது அதே விசையுடன் 'ஆப்போஸிட் டைரக்ஷ'னில் (எதிர் திசையில்) திரும்பி வருகிறாற்போலத்தான் physical plane -ல் எல்லா ரியாக்ஷனும் இருப்பாதலேயே!நாம் செய்த நல்லது (புண்யம்) எப்படி வெளியிலே பரவுகிறதோ அப்படியே வெளியிலிருந்து நமக்கு நல்லது (புண்யம்) திரும்புகிறது;கெட்டதும் (பாபமும்) இப்படியே என்றுதான் அதற்கு அர்த்தம்.

வெறும் physical plane -லேயே ஜட இயற்கை என்கிற வெளிநேச்சர் அடங்கியிருந்ததானால், ஸூ¨ர்யன் எப்போதோ குளிர்ந்து போயிருக்கும் என்று ஸயன்ஸ்டிஸ்டுகளே சொல்கிறார்கள். எப்படியோ அதில் உஷ்ண சக்தி ஊறிக் கொண்டேயிருக்கிறது என்று சொல்லி இதன் காரணத்தைப் பலவிதமாக ஊஹம் செய்கிறார்கள். ஆதி காரணம் ஈஸ்வர சக்திதான். அதுதான் இந்த பிரபஞ்ச தர்மத்துக்காக, லோகங்களின் நெறியான போக்குக்காகவும் வாழ்க்கைக்காகவும் ஸ¨ர்யனில் குறையாத உஷ்ண சக்தியை ஊட்டிக் கொண்டேயிருக்கிறது. ஸயன்டிஸ்ட்கள் ஒன்றொன்றாகக் கேள்வி கேட்டுக் கொண்டு காரணங்களைக் கண்டுபிடித்துக் கொண்டே போனாலும் கடைசியில் ஸயன்ஸினால் காரணம் சொல்ல முடியாத ஒரு 'ஆரிஜினி'ல் (தோற்றுவாயில்) தான் போய் முட்டிக் கொண்டு நிற்கிறார்கள். ஐன்ஸ்டைன் மாதிரி ரொம்பப் பெரியவர்கள் அதுதான் ஈஸ்வர சக்தி என்று நமஸ்காரம் பண்ணுகிறார்கள். மநுஷ்ய மனநெறி, மனித வாழ்வின் ஒழுங்கு ஆகியனவும் அதே சக்தியுடைய தர்மத்துக்கு இன்னொரு ரூபந்தானாகையால், மனநெறியே இயற்கையையும் ஸாதகமாகவோ பாதகமகவோ ஆக்குகிறது.

விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தின் 'பல ச்ருதி'யில் பகவானை நேச்சர் என்கிற ஜடப் பிரபஞ்ச தர்மம், மநுஷ்ய மனநெறியை உண்டாக்கும் மதாசார தர்மம் ஆகிய இரண்டுக்கும் மூலமாக ரொம்ப அழகாகச் சொல்லியிருக்கிறது. தரிப்பது (தாங்குவது) தர்மம் வெட்ட வெளியிலே விழாமல் தொங்கிக் கொண்டிருக்கிற நக்ஷத்ரங்களையும், திக்குகளையும், பூமியையும், உருண்டையான பூமியிலிருந்து வழியாமல் கொட்டாமல் ஸமுத்ரத்தையும் ஸ¨க்ஷ்மமாக தரிக்கும் தர்ம ஸ்வரூபம் பகவானே என்று அதில் ஒரு ஸ்லோகத்தில் சொல்லியிருக்கிறது.

த்யௌ ஸ சந்த்ரார்க-நக்த்ரா கம் திசோ பூர்-மஹோததி :I
வாஸுதேவஸ்ய வீர்யேண வித்ருதாநி மஹாத்மந :II

வாஸுதேவனுடைய வீர்யம்தான் அண்ட கோளத்தையும், பூகோளத்து ஸமுத்ரத்தையும் தாங்கித் தரிக்கிறது என்று இங்கே சொல்லிவிட்டு, அப்புறம் மநுஷ்யன் என்ற சைதன்யப் பிரபஞ்சத்தைச் சேர்ந்த இந்த்ரியம், மனஸ் புத்தி, பிரத்யேக குணம், தேஜஸ், பலம், தைர்யம், க்ஷேத்ரம் என்ற சரீரம் அதில் அறிவாயிருக்கிற க்ஷேத்ரஜ்ஞன் என்ற ஆத்மா எல்லாமே வாஸுதேவ மயமானது என்று வர்ணிக்கப்படுகிறது.

இந்த்ரியாணி மநோ புத்தி : ஸத்-த்வம் தேஜோ பலம் த்ருதி :I
வஸுதேவாத்மகான்-யாஹ§ க்ஷேதரம் க்ஷேத்ரஜ்ஞ ஏவ ச :II

ஜடப் பிரபஞ்ச வஸ்துக்களை பகவானே நேராகச் சேர்த்துப் பிடித்து ஸம்பந்தப்படுத்தி தர்ம நெறியில் வைத்திருக்கிறான். சைதன்யமான ஜீவப் பிரபஞ்சத்திலோ மனஸ் என்று ஒன்றைத் தந்து, அதற்கு ஸ்வதந்திரம் தந்து ஆட்டம் போட்டுவிட்டு, ஜீவன் தானாகவே அதை நெறிப்படுத்திக் கொள்கிற ரீதியில் சாஸ்திரங்களையும் கொடுத்து அதில் ஆசாரத்தை முதலாவதாக வைத்திருக்கிறான் என்பதை அடுத்த ஸ்லோகம் உணர்த்துகிறது. இத்தனை நாழி நான் சொன்ன 'ஆசாரம்'என்ற விஷயத்துக்கு முத்தாய்ப்பு வைப்பதாக அந்த ஸ்லோகம் இருக்கிறது:

ஸர்வாகமாநாம் ஆசார : ப்ரதமம் பரிகல்பதே I
ஆசார-ப்ரபவோ தர்மோ தர்மஸ்ய ப்ரபு-ரச்யுத :II

'ஸர்வ ஆகமங்கள்' என்கிற ஸகல சாஸ்திரத்துக்கும் ஆசாரமே முதலானதாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆசாரத்திலிருந்து உண்டாவதே தர்மம். அந்த தர்மத்துக்குப் பிரபு அச்யுதனான பகவான் - என்று அர்த்தம். அச்யுதன் என்றால் அசங்காமல் 'ஸ்டெடி'யாக இருக்கிறவன். தர்மம் என்ற அறநெறி ஸ்டெடியாக இருக்க வேண்டியதல்லவா?

மனநெறியே இயற்கைநெறியை ஆள்வது.

ஜீவப் பிரபஞ்சத்தின் ஆசார வழியாய் உண்டாகும் தர்ம நெறியையும் ஜடப் பிரபஞ்சத்தின் சீரான ஒழுங்கையும் இப்படி இணைத்துக் கொடுத்திருக்கிறது. அதாவது நம்முடைய ஆசாரத்தால்தான் நம் சொந்த வாழ்க்கை, நம் ஸமூஹ வாழ்க்கை இவை மட்டுமின்றி லோக வாழ்க்கையே நல்ல முறையில் அமையும். இதை நவீன மனப்பான்மையுள்ளவர்கள் எல்லாரும் புரிந்து கொள்ளும்படி அந்த பகவான், வாஸுதேவன், அச்யுதன் அருள் செய்ய வேண்டும். ஆசாரங்களிலேயே தர்மம் பிறப்பதால் தர்மத்தின் பிரபுவான பகவான் ஸதாசாரம் தழைக்கும்படியாக அநுக்ரஹிக்க வேண்டும்.

ஒற்றையடிப் பாதை என்னும் இந்துமதமே மார்க்கமாயிருக்கிறது - மஹா பெரியவா


இன்னார், இன்ன காலத்தில் ஏற்படுத்தினார்கள் என்றே தெரியாமல் நம்முடைய ஆசாரங்கள் வந்திருக்கின்றன. ராமாநுஜர், மத்வர், சைதன்யர் என்று நமக்குப் பெயர் தெரிந்தவர்கள் ஓரொரு காலத்தில் ஏற்படுத்தின ஸம்பிரதாயத்திலிருப்பவர்களும் பின்பற்றுகிற ஆசாரங்களில் பெரும்பாலானவை இப்படிக் காலம் தெரியாததாக, கர்த்தா தெரியாதவராகத்தான் இருக்கின்றன. மற்ற மதங்களைப் பற்றித் திட்டவட்டமாக இன்னார் இன்ன காலத்தில் ஏற்படுத்தின ஆசாரம் என்று தெரிவதுபோல நமக்கு இல்லை.

அந்த மதங்கள் இந்த இன்ஜினீயர் இந்த வருஷத்திலே போட்டார் என்று சொல்லக்கூடிய தார் ரோடுகள் மாதிரியிருக்கின்றனவென்றால், நம் மதம்?

இது ஒற்றையடிப் பாதை மாதிரியிருக்கிறது ! ஒற்றையடிப் பாதையை யார் எப்போது போட்டார்கள்? சொல்லத் தெரியவில்லை. மேல் பார்வைக்குத் தார் ரோட் உசத்தியாயிருக்கிறது. ஆனால் யோசனை பண்ணிப் பார்த்தால் தார் ரோடைவிட ஒற்றையடிப்பாதைதான் பல விஷயங்களில் மேல் என்று தெரிகிறது. தார் ரோடும் கொண்டு விடாத இடத்துக்கு இந்த ஒற்றையடிப் பாதை தானே கொண்டு சேர்க்கிறது? ஜனங்கள் நடக்க நடக்கத் தார் ரோட் ரிப்பேராகி வருஷா வருஷம் மராமத்து பண்ண வேண்டியிருக்கிறது. ஒற்றையடிப் பாதையோ நடக்க நடக்கத்தான் இன்னம் நன்றாக ஆகிறது. ரிப்பேர் என்ற பேச்சே கிடையாது. அதேபோல ஆக்ஸிடென்டும் தார் ரோட்டில் தானேயன்றி, ஒற்றையடிப்பாதையில் உண்டோ? மேலே வழியில்லை என்று blind alley -யாகச் சிலர் தார் ரோட் மொட்டையாக முடிகிற மாதிரி எந்த ஒற்றையடிப் பாதையாவது முடியுமா?

நன்றாகத் திறந்து விட்ட மார்க்கம், கூட்டங், கூட்டமாகப் பூர்விகர்கள் போயே புல் பூண்டு இல்லாமல் பாலிஷ் ஆன மார்க்கம், ஆக்ஸிடென்டே இல்லாத மார்க்கம், தார் ரோட் மாதிரிப் பார்க்கப் பகட்டு இல்லாவிட்டாலும், பரம ஸெளகர்யமாக, நிதானமாகக் கால் நடையிலேயே பரமாத்மாவிடம் கொண்டு விடுகிற மார்க்கம் - இப்படிப்பட்ட ஒற்றையடிப் பாதைதான் நம்முடைய பூர்வாசாரம். 'தார் ரோடானால் கார் ஸவாரி பண்ணிச் சுருக்க (விரைவில்) போய்ச் சேர்ந்து விடாலமே' என்றால், ஒற்றையடிப் பாதையிலோ அப்படிச் சுற்றிக் கொண்டு போகாததால், குறுக்கு வழியில் நடந்தே, அதே நேரத்தில் ஆக்ஸிடென்ட் எதுவுமில்லாமல் போய்ச் சேர்ந்து விடலாம். ரோடே போட முடியாத இடங்களில் - காட்டிலே, மலையிலே கூட - இதுதான் மார்க்கமாயிருக்கிறது.

Thursday 13 February 2014

உயிரெலாம் உருகுதே உனது புகழ் பாடவே...


உயிரெலாம் உருகுதே உனது புகழ் பாடவே...
மனமெலாம் மருகுதே உனது முகம் காணவே...

வேதங்கள்-நாதங்கள் நீ போற்றுவாய்...இறைவா...!!!
பாபங்கள், சாபங்கள் பறந்தோடவே துணைவா...
அனைத்தையும் அறிந்திடும் ஜகத்குருவே நீயே....

தாயாய் வந்தாய் ஆதிசிவ சங்கரா...
தவமாய்  நின்றாய் பரமசிவ சங்கரா... 

நீரோடையாய் நடந்தாய்...
பார் முழுவதும் கலந்தாய்...
ஏற்றினாய்...ஞானஒளி ஏற்றினாய்...
கார்மேகமாய் படர்ந்தாய்...
கருணை மழையென பொழிந்தாய்... தூயவா...

துறவு கொண்ட பாலசேகரா....
சங்கரா.. ஜெய சங்கரா 
தண்டம் ஏந்திய தாண்டவா....
குருவாய் வருவாய் நடராஜ ரூபனே 
திருவாய் மலர்வாய் நீ.... லோக சாந்தனே...

சங்கரா...சங்கரா...
சங்கரா.. ஜெய சங்கரா ..

உயிரெலாம் உருகுதே உனது புகழ் பாடவே...
மனமெலாம் மருகுதே உனது முகம் காணவே...

Monday 3 February 2014

அன்று கண்ட அபிவிருத்திக்கும், இன்று காணும் சீரழிவுக்கும் காரணம் என்ன?

காம்ய பலனுக்காவே சாஸ்திர கர்மாவைக் காட்டி ஜீவனை நல்ல வழியில் 'தாஜா'பண்ணிக்கொண்டு வருவதற்கு sugar-coated pills -ஐ (சர்க்கரை தடவிய மாத்திரையை) உதாரணமாகச் சொல்லலாம். இஷ்ட பலன்தான் சர்க்கரை மாதிரி ஜீவனுக்குத் தித்திருக்கிறது. அவன் குழந்தையைப் போல அறியாதவனாயிருக்கிறான். சர்க்கரை உடம்புக்குச் சூடு என்று குழந்தைக்குத் தெரியாததுபோல இந்த ஐஹிக ஸெளக்யங்கள் ஆத்மாவுக்குக் கெடுதி என்று அவனுக்குத் தெரியவில்லை. சாஸ்திரகாரர்களான ரிஷிகளுக்கு இந்தக் குழந்தையிடமும் கருணை. அதனால் அது கேட்கிற பெப்பர்மின்டைக் கொடுக்க நினைக்கிறார்கள். குழந்தை பெப்பர்மின்ட் என்றே நினைத்தாலும் அது உள்ளுக்குள்ளே மருந்து. உள்ளே மருந்தை வைத்து மேலே சர்க்கரையைப் பூசியிருக்கிறது. சூட்டைத் தணிக்கிற மருந்துச் சரக்கு உள்ளே நிறைய இருக்கிறது; மேலே மட்டும் கொஞ்சூண்டு சூடு பண்ணும் சர்க்கரை தடவியிருக்கிறது. இதுதான் சாஸ்திரோக்த கர்மா. இஷ்ட பூர்த்தி என்று வெளியிலே தித்திப்பாகத் தெரிகிறது. உள்ளே இந்த இஷ்டமெல்லாம் கஷ்டம்தான் என்று புரியவைத்து இஷ்டப்படி செய்யாமல் நல்ல நெறியில் கட்டுப்படுத்துகிற விவேக மருந்து இருக்கிறது. மருந்து இருப்பது தெரியாமலேதான் குழந்தை சாப்பிடுகிறது. ஆனால் அது பலிக்காமல் போய்விடுமா என்ன?

இன்னொன்று :காம்ய கர்மாவைத்தான் பகவான் இங்கே சொல்கிறாரென்றாலும், சாஸ்த்ரோக்தமாகப் பண்ண ஆரம்பிக்கும்போதே, காம்ய கர்மாக்களோடு நிஷகாம்யமாகவும் சில காரியங்களைக் கொடுத்துத்தானிருக்கிறது. ஸந்த்யாவந்தனம் போன்றவற்றைப் பண்ணுவதால் காம்யமாக இன்ன லாபம் கிடைக்கும் என்று சொல்லியிருக்கவில்லை; இவற்றைப் பண்ணாமல் விட்டால் பாவம், தோஷம் என்று சொல்லி, அதற்குப் பயந்துதான் பண்ண வைத்திருக்கிறது. காம்யபலன் வேண்டும் என்ற ஆசையினால் அதற்கான சாஸ்த்ரோக்த கர்மாக்களைச் செய்யும் ஜீவன் அதோடுகூடச் சொன்ன இம்மாதிரி நிஷ்காம்யமான கர்மாக்கள் ஒன்றிரண்டையும் செய்கிறான். இது இவன் சித்த சுத்தியில் பக்வப்படுவதற்கு மேலும் ஸஹாயம் செய்கிறது.

ஆனால், அன்று கண்ட அபிவிருத்திக்கும், இன்று காணும் சீரழிவுக்கும் காரணம் என்ன? 

இப்போது சில சீர்திருத்தக்காரர்கள் சொல்வது பாமர ஜனங்கள் உள்பட எவருமே சாஸ்திரோக்த கர்மாக்களைப் பண்ணாமல், ஞானி மாதிரி தத்வ விசாரம் பண்ணிக் கொண்டிருக்க வேண்டுமென்பது; பகவானும் சாஸ்திரங்களும் சொல்வதோ, ஞானி கூடப் பாமரன் மாதிரி சாஸ்திர கர்மாவைப் பண்ணி ஆசார அநுஷ்டானாதிகளை நடத்திக் காட்ட வேண்டுமென்பது.

எது ஸரி என்பதற்கு ஹிஸ்டரியையும், யதார்த்தத்தையும் பார்த்தால் போதும். பகவான் சொன்னபடி செய்து கொண்டிருந்தவரையில் நம் தேசம் லோகத்துக்கே மாடலாக ஸத்ய தர்மங்களிலும், பக்தியிலும் ஞானத்திலும், கலாசார நாகரிகத்திலும், ஸமூஹம் பூராவின் சீரான ஒழுங்கிலும் தலைசிறந்து இருந்திருப்பதை ஹிஸ்டரி காட்டுகிறது. இப்போது ரிஃபார்மர்கள் அபிப்ராயப்படி செய்ய ஆரம்பித்தபின் எப்படியிருக்கிறோம் என்பது தெரிந்ததே. 

கீதை சொன்னபடி மேலே இருந்தவனும் கீழே இருக்கிறவனைப் போலச் செய்து காட்டிக் கொண்டிருந்த வரையில் எல்லாரும் மேலே போனார்கள்; இப்போது கீழே இருக்கிறவனும் மேலே போய் விட்ட மாதிரி பாவித்துக்கொண்டிருப்பதில் எல்லாரும் அதல பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறோம் !

கட்டெல்லாம் விட்ட பரம ஸ்வதந்த்ர நிலையிருந்த ஞானியும் சாஸ்திரக் கட்டுப்பாட்டுப்படிச் செய்து மற்றவர்களையும் அதேபோலச் செய்வித்துக் கொண்டிருந்தபோதே தேசம் ஆத்மிகமாக மட்டுமில்லாமல், இப்போது ஸயன்ஸ் என்பதில் வரும் அநேக வித்யைகள், வியாபாரம் (கடல் கடந்தெல்லாம் கூடப் போய் வாணிபம் பண்ணியிருக்கிறார்கள்) எல்லாவற்றிலும் உன்னதமாயிருக்கிறது. 

"லோகம் பொய்;ஆத்மா, ஆத்மா" என்று சொல்லிக் கொண்டு ஸயன்ஸிலும், பொருளாதாரத்திலும் நாம் பிற்பட்டு நின்றதாகச் சொல்வதற்கு கொஞ்சங்கூட ஆதாரமில்லை. துருக்கர்கள், பிரிட்டிஷ்காரர்கள் ஆகியவர்களுடைய ஆதிக்கத்தில்தான் ஹிந்து ஸமுதாயம் ஒடுங்கி இவற்றில் backward state வந்ததே தவிர, அதனுடைய மதாசாரத்தாலும், ஃபிலாஸஃபியாலும் அல்ல*. கட்டுப்பட்டிருந்தாலே சுத்தியாகக்கூடிய ஸாமானிய ஜனங்களையும் ஸ்வதந்திரம் என்று அவிழ்த்து விட்டிருக்கும் இப்போதோ எல்லாவற்றிலும் கீழேதான் போய்க்கொண்டிருக்கிறோம். 
"பாரமார்த்திமாகக் கீழே போகிறோம் என்று வேண்டுமானால் சொல்லுங்கள்; ஸயன்ஸில், காமர்ஸில் அபிவிருத்திதான் ஆகியிருக்கிறோம். Atom research , electronics எல்லாங்கூட கரைத்துக் குடித்து விட்டோமாக்கும்" என்று சொல்லலாம். ஆனால் நம்முடைய moral standard கீழே போய்விட்டதென்று மற்ற தேசத்தார் - இதுவரை நம் தேசத்தை தர்மபூமி என்று கொண்டாடிக் கொண்டிருந்தவர்கள் - அபிப்ராயப்பட ஆரம்பித்தபின் இவற்றில் நாம் முன்னேறி என்ன பிரயோஜனம்?

'காமர்ஸ்' ஜாஸ்தியாச்சு என்று நாம் பெருமைப்பட்டாலும் இறக்குமதி செய்கிற அந்நியர்கள் சொல்வதைக் கேட்டால் அவமானமாயிருக்கிறது. "இந்த இந்தியர்கள் முதலில் காட்டுகிற 'ஸாம்பிள்' ஒன்றாயிருக்கிறது; அப்புறம் அனுப்பி வைக்கிற சரக்கு வேறாயிருக்கிறதே! நாணயமில்லாமல் நடக்கிறார்களே!" என்கிறார்கள். ஸயன்ஸ் அபிவிருத்தியில் பரஸ்பரம் தெரியாததைத் தெரிந்துகொண்டு, கூடச் சேர்ந்து ஆராய்ச்சி பண்ணுவதற்கும் நம்மை அவ்வளவாக நம்பமாட்டேனென்கிறார்கள் என்று கேள்வி. முன் நாளில் கட்டுப்பாட்டால் ஏற்பட்ட தர்மபலம் என்கிற அஸ்திவாரத்தின் மேலேயே விஞ்ஞான வித்யைகள், வியாபாரம் எல்லாம் நல்ல பெயரோடு விருத்தியாயின. அஸ்திவார பலம் இல்லாமல் இப்போது இவற்றில் ஏற்படுவதாகச் சொல்லப்படும் முன்னேற்றம் (நிலைத்து) நிற்காது.

பூர்வாசாரங்கள் வேண்டியதில்லை என்று ஸுலபமாகச் சொல்லி, ஜனங்கள் இதை வேத வாக்காக (வேத வழி வேண்டாம் என்பதையே வேத வாக்காக) நம்பச் செய்து விட்டார்களே என்று மிகவும் துக்கமாக இருக்கிறது. 

வேணுமா, வேண்டாமா என்பதற்கு அதிகமாக வாதப் பிரதிவாதம் எதுவும் செய்ய வேண்டியதில்லை. நான் இத்தனை நேரம் சொன்னதெல்லாங்கூட அவசியமில்லைதான். ஒரு சின்ன விஷயத்தைக் கொண்டே முடிவு செய்து விடலாம். வியாதியஸ்தன் மருந்து சாப்பிட வேண்டுமா, வேண்டாமா என்பதற்கு விவாதம் பெரிசாகப் பண்ண வேண்டுமா? மருந்தைக் கொடுத்துப் பார்த்தால் என்ன நடக்கிறது, கொடுக்காவிட்டால் என்ன நடக்கிறது என்று பார்த்தால் போதாதா? மருந்து கொடுக்கிற மட்டில் வியாதி குறைகிறது, விட்டு விட்டால் ஜாஸ்தியாகிறது என்று பிரத்யக்ஷத்தில் தெரிகிறது. அப்போது மருந்து வேண்டத்தான் வேண்டும் என்றுதானே அர்த்தம்?

பூர்வாசாரங்கள் இருந்தவரையில் தேசத்தில் எல்லாத் துறையிலும் அபிவிருத்தி இருந்தது. இதற்கு மேலாக ஒழுக்கமும் ஒற்றுமையும் இருந்தன. அவற்றை ஒழிக்க ஆரம்பத்ததிலிருந்து இவற்றையெல்லாமும் விரட்டியாகிறது என்பதிலிருந்தே அந்த மருந்து இல்லாவிட்டால் ஆத்மாவுக்கு வியாதிதான் என்று தெரியத்தானே வேண்டும்? 

ஒரு வேளை சாப்பாட்டை நிறுத்தினால், உடனே ஓய்ச்சலாக வந்தால் சாப்பிட வேண்டும் என்று தெரிகிறதோ இல்லையோ? சாஸ்திரத்தை விட்டபின் தனி வாழ்க்கை, ஸமுதாய வாழ்க்கை இரண்டிலும் நிம்மதி போன பிற்பாடும் பூர்வாசாரம் வேண்டும் என்று தெரிந்து கொள்ள மாட்டோமென்றால் என்ன பண்ணுவது?  தலைவர்களாயிருக்கப்பட்டவர்கள் மாட்டேனென்கிறார்கள்.

தப்புப் பண்ணிவிட்டோமென்று ஒப்புக்கொள்வது கஷ்டந்தான் என்றாலும் ஒரேயடியாகப் முழுகிப் போகிற நிலை வந்தபோதாவது, ஒப்புக்கொண்டு வெளியே வரவும், மற்றவர்கள் வெளியில் இழுத்துப் போடவும் முயலத்தானே வேண்டும்? இன்னம் முழுகியே போய்விடவில்லை. அதனால்தான் இதை நான் சொல்லி, நீங்கள் கேட்டுக் கொண்டாவது உட்கார்ந்திருப்பது! கேட்டது போதாது. புயல் வருகிறது என்று weather forecast கேட்டால் மட்டும் பிரயோஜனமில்லை. அது நம்மை பாதிக்காமலிருக்க என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்ய வேண்டும். Weather proof ஆக, தர்ம ரக்ஷையாக, கவசமாக இருப்பது பூர்விகர்களின் ஸமயாசாரம்தான். ஆகையால் இதைக் கேட்டதற்கு லக்ஷணம் இனிமேலாவது கேட்டபடிப் போவதற்குப் பிரயத்தனப்படுவதுதான்.

சிகாம் ஸ¨த்ரம் ச புண்ட்ரம் ச ஸமயாசாரமேவ ச I
பூர்வை : ஆசரித : குர்யாத் அந்யதா பதிதோ பவேத் II

பதிதபாவனன் என்று பகவானைச் சொல்கிறோம். "பதிதபாவன ஸீதாராம்" என்பதாவது காந்தியால் நின்றிருக்கிறது. அந்த ராமன் ஸகல கார்யமும் சாஸ்திரத்தைப் பார்த்துப் பார்த்தேதான் செய்தான். அந்த வழியிலிருந்து நாம் அடியோடு வழுக்கி விழுந்து பதிதர்களான பின், அவன் நம்மை பாவனப்படுத்துவது என்றில்லாமல், அவனை நாம் அவ்வளவு வேலை வாங்காமல், இப்போதிலிருந்தே நம்மை முன்னோர்களின் நெறியில் அவன் தூக்கி விட்டு ரக்ஷிக்கும்படியாகப் பிரார்த்தனை செய்வோம்.