Thursday 9 February 2012

அருள் மழை - 10 - மஹா பெரியவாள் - மாங்காடு


பெரியவா’ என்றால், அது காஞ்சிப் பெரியவரைத்தான் குறிக்கும்.

விழுப்புரத்தில் பெரியவர் இருந்த காலந்தொட்டு அவருடன் கூடவே இருந்தவர் லக்ஷ்மிநாராயணன். தனது ஆறு வயது முதலே பெரியவாளுடன் நெருக்கமாகப் பழகி, அவருக்குச் சேவை புரிந்தவர். தற்போது 76 வயதாகும் இவர், பெரியவாளின் நினைவுகளை இப்போதும் நெஞ்சில் சுமந்துகொண்டிருக்கிறார். அந்தச் சிலிர்ப்பான நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்...

முன்னுரை : (மாங்காடு ஸ்தல புராணம் http://www.mangadukamakshi.com)

சிவபெருமானும், தேவியும் கைலாயத்தில் ஒரு நாள் விளையாடும் பொழுதில், தேவியானவர்  விளையாட்டாக சிவபெருமானின் கண்ணை மூடி விளையாட, உலகம் முழுதும் இருண்டுவிட்டது!

தாயார் தன் தவறுக்கவருந்தி சிவனின் மன்னிப்பை கோர!, சிவபெருமான் தேவியை  பூலோகம் சென்று கடும் தவம் செய்ய பணித்தார்! தேவியாரும் பூலோகம் வந்து, இடது கால் பஞ்சாக்னியில் வைத்து, வலது காலை மடக்கி, இடது கையில் ஜபமாலையுடன் தலை மேல் தூக்கி, கடும் தவம் புரிய தொடங்கினார்.

தவம் முடிந்தபின், தாயார் கைலாயம் செல்லும் பொழுது, அக்னியை அணைக்காமல் செல்ல, அந்த இடமே அக்னியின் சூட்டில் தவிக்க தொடங்கியது.. பின் அங்கு ஆதி சங்கரர் அங்கு வந்த பொழுது, அக்னியை அணைத்து, அங்கு ஒரு ஸ்ரீ ச்சக்கரம் நிறுவினார்...

மாங்காடு அம்மன் கோவில் புதுப்பணி மாங்காடு காமாட்சி அம்மன் ஆலயம் புதுப்பிக்கப்படுவதற்கும், அருகேயே இவர் ஒரு வேத பாடசாலை ஆரம்பிப்பதற்கும் காஞ்சிப் பெரியவர் காரணமாக இருந்ததை விவரிக்கிறார் லக்ஷ்மிநாராயணன்.


அது 1952-ஆம் வருஷம்.ஒவ்வொரு வியாழக்கிழமையும், பெரியவாளைப் பார்க்கக் காஞ்சிபுரம் வருவோம். அப்படி ஒரு வியாழக்கிழமையன்னிக்கு வந்தப்போ,


”நேத்திக்கு எனக்கு ஒரு சொப்பனம். ‘பஞ்சாக்னி ஜுவாலையால எனக்கு ஒடம்பெல்லாம் எரியறது. இங்கே புனருத்தாரணம் பண்ணணும்’னு அம்பாள் சொப்பனத்துல பேசினா. எங்கேயோ அம்பாள் கோயில் ஒண்ணு பாழடைஞ்சு கெடக்கு. கண்டுபிடிச்சு சொல்றியா?”ன்னு எங்கிட்ட கேட்டார்.
”ஒரு வாரம் டயம் கொடுங்கோ”ன்னேன். அடுத்த வாரம் அவரைப் பார்த்தப்போ, முதல் நாள் ராத்திரி மறுபடியும் அம்பாள் சொப்பனத்துல வந்ததா சொன்னார்.


அன்னிக்கு ஒரு யானை வந்து தும்பிக்கையால அவரைக் கைப்பிடிச்சு அழைச்சுண்டு போச்சு. பெரியவா அந்த யானையோடு கிளம்பிட்டா. அவருக்கு மட்டும் அது யானையா தெரி யலே. அம்பாளாத்தான் தெரிஞ்சிருக்கு. ரொம்ப நேரம், ரொம்ப தூரம் யானை பெரியவாளை அழைச்சுண்டு போச்சு. பெரியவாளும் அது பின்னாடியே நடந்து போயிண்டே இருந்தா. பல மணி நேரத்துக்கப்புறம் ஒரு மண் ரோட்டுல யானை திரும்பித்து. அங்கே கொஞ்ச தூரம் போனதும், யானை மறைஞ்சுடுத்து. அப்படின்னா, அந்தப் பாழடைஞ்ச அம்பாள் கோவில் இங்கேதான் எங்கேயோ இருக்கணும்னு பெரியவாளுக்குத் தெரிஞ்சுடுத்து. ராத்திரி பெரியவா அங்கேயே தங்கறதா தீர்மானம் பண்ணிட்டா. அங்கே ஒரு மாட்டுக் கொட்டகை மாத்திரம்தான் இருந்துது. பெரியவா அதனுள்ளே போய்ப் படுத்துண்டுட்டா.


அந்த ஏரியாவுக்கு அப்போ மணலி ராமகிருஷ்ண முதலியார்தான் நாட்டாமை. பெரியவா வந்திருக்கிற விஷயம் தெரிஞ்சு முதலியார் வந்து பார்த்தார். ”என்ன செய்யணுமோ, நான் செய்யறேன். பெரியவா கவலைப்படாதீங்கோ”ன்னார்.


”24 மணி நேரத்துல சம்ப்ரோக்ஷணம் பண்ணணும்”னு சொன்னா பெரியவா. மளமளன்னு காரியங்கள் ஆரம்பிச்சுது.


ஆளுக்கு ஆயிரம் ரூபாபோல போட்டா. புதரும், பாம்புப் புத்துகளுமா இருந்த அந்த இடத்தைச் சுத்தம் பண்ணினா. சின்ன கோபுரம் தெரிஞ்சுது.
”ஆதிசங்கரர் கர்ப்ப வாசம் இருந்த இடம் இதுதான்”னா பெரியவா.
கர்ப்ப வாசம்னா பத்து மாசம் ஓரிடத்திலே தங்கியிருக்கறது. ”அர்த்த மேரு இங்க பிரதிஷ்டை பண்ணியிருக்கு. அம்பாள் இங்கே உக்ரமா இருக்கா; அவளுடைய உக்ரத்தைத் தணிக்கணும்”னு சொன்னா.
இதையெல்லாம் செஞ்சு முடிச்சுட்டுப் பெரியவா மறுபடியும் காஞ்சிபுரம் போயிட்டா.


இடத்தை எல்லாம் சரி பண்ணி, கும்பாபி ஷேகம் நடத்தினோம். அப்போதைக்கு ஏகாம்பர குருக்கள்னு ஒருத் தரை பூஜை பண்ண நியமனம் பண்ணினோம். மாங்காடு கோயில் பத்தி அப்பல்லாம் யாருக்கும் தெரியாது.


பக்கத்துலயே பெரியவா தனக்கொரு இடம் வேணும்னு கேட் டிருந்தா. ”ஆகட்டும். முடிச்சுத் தரேன்”னேன். ஆனா, ஏதேதோ வேலையில் அது அப்படியே தள்ளிப் போயிடுத்து. 1965-லே மறுபடியும் ஒரு தரம், ”மாங்காட்டுல இடம் வாங்கித் தரணும்னு கேட்டேனே, மறந்துட்டியா?”ன்னு ஞாபகப்படுத்தினா பெரியவா. கூடவே, ”ஒருத் தர்கிட்டேயும் கடன் கிடன் வாங்கப்படாது. உன் கைக்காசைப் போட்டு வாங்கித் தரணும்”னு நிபந்தனை போட்டா. அதனால, அது முடியாமலே இருந்தது. பெரியவா அப்பப்போ ஞாபகப்படுத்திண்டே இருப்பா. ஒருவழியா 1976-ல இந்த இடத்தை வாங்கினேன். மூணரை கிரவுண்டு நிலம். அஞ்சு லட்சம் இருந்தாத்தான் கட்ட முடியும். என்னோட வீட்டை வித்து, மனைவியின் நகைகளை வித்து எப்படியோ புரட்டிப்போட்டு வாங்கிட்டேன்.

”இங்கே ஒரு அம்பாள் கோவில் கட்டணும். முதல்ல ஆதிசங்கரர் பாதுகையை வைக்கணும். அப்புறம் மேல கட்டலாம். 16 அடி அஸ்திவாரம் தோண்டி, உள்ளே 108 கோடி பஞ்சாட்சரம் எழுதிப் போடணும். அஞ்சு ஜட்ஜ் வந்துதான் ஃபவுண்டேஷன் போடணும்”னார். சுத்துப்பட்டு இருக்கிற பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள்கிட்டே 108 கோடி பஞ்சாட்சரம் எழுதி வாங்கினோம்.

ஜட்ஜ் பாலசுப்பிரமணிய அய்யர்கிட்ட ஃபவுண்டேஷனுக்குப் பெரியவாளே சொல்லிட்டா. அவர் ஆக்ஞை பண்ணினா, உடனே எடுத்துச் செய்யறதுக்குப் பெரிய மனுஷாள்ளாம் காத்திருந்தா.


1982-ஆம் வருஷம்… குரோம்பேட்டைல ஒரு சின்ன இடம் வாங்கி வீடு கட்டிண்டு போயிட்டேன். அப்போ நான் சிம்ஸன்லே அக்கவுன்ட்ஸ் செக்ஷன்லே வேலை பார்த் துண்டு இருந்தேன். வேலை முடிஞ்சதும், நேரே இங்கே வந்து கட்டட வேலைகளைக் கவனிச்சுட்டு, ராத்திரி குரோம்பேட்டை போயிடுவேன்.

வேலை இழுத்துண்டே போய், 1992-லதான் முடிஞ்சுது. இந்தக் கோவிலுக்குப் பெரியவா கையாலதான் கும்பாபிஷேகம் பண்ணணும்னு எனக்கு ஆசை. ”நான்தானே எல்லாம் பண்ணி வெச்சேன். இதுக்கும் ஏன் என்னையே கூப்பிடறே? ஜெயேந்திரரைக் கூப்பிட்டுக்கோ. கும்பாபிஷேகம் பண்ற காலம், குரு வாரமும் பஞ்சமியும் சேர்ந்து இருக்கணும்”னா. பெரியவாளோட நட்சத்திரம் அனுஷம்கிறதால, அனுஷமும் சேர்ந்திருந்தா நன்னாருக்கும்னார் ஜெயேந்திரர்.

1994 ஜனவரி 8-ஆம் தேதி… 12 மணிக்கு எனக்குத் திடீர்னு கடுமையான ஜுரம்! என் குடும்பத்தார் என்னை ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணிட்டாங்க. ”உங்களுக்குக் கடுமையான ஹார்ட் அட்டாக் வந்திருக்கு”ன்னார் டாக்டர். மூணு நாள் ஐசியு-ல இருந்தேன். நாலாம் நாள், டாக்டர்களே ஆச்சரியப்படும்படியா நான் குணமாகிட்டேன். ”உங்களை டிஸ்சார்ஜ் பண்ணிடறோம். இருந்தாலும், 45 நாளைக்கு எங்கேயும் டிராவல் பண்ணவேண்டாம்”ன்னார் டாக்டர். பிற்பாடுதான் எனக்குத் தெரிய வந்துது… எனக்கு ஹார்ட் அட்டாக் வந்த அன்னிக்குதான் பெரியவா முக்தி அடைஞ்சுட்டாங்கிற விஷயம்.

அப்புறம், விஜயேந்திரர்தான் வந்து இங்கே கும்பாபிஷேகம் பண்ணி வெச்சார்.”இந்த இடத்திலே யஜுர் வேத பாடசாலை ஆரம்பிச்சு நடத்து”ன்னு சொல்லியிருந்தா பெரியவா. அதன் படி ஆரம்பிச்சு நடத்தினேன். முதல்லே ஆறு பேர் வெளியூர்ல இருந்து வந்தா. அப்புறம் பத்தாச்சு; பன்னிரண்டாச்சு. அப்புறம் வேதம் கத்துக்க வரவாளோட எண்ணிக்கை படிப்படியா குறைஞ்சுடுத்து.ஒண்ணரை வருஷமா யாரும் வரதில்லே. எனக்கு இது பெரிய குறை. பெரியவா ஆசைப்படி கட்டின கோயில் இது. வேத பாடசாலையும் அவர் உத்தரவின் பேரில் ஆரம்பிச்சதுதான். இது தொடர்ந்து நன்னா நடக்கணும் கிறதுதான் என் ஆசை!”- சொல்லும்போதே லக்ஷ்மிநாரா யணனின் குரலில் ஒரு தழுதழுப்பு!

No comments:

Post a Comment